ஜுனைத் எஸ். அஹ்மத்

இறையியல் ஓய்வுபெறவில்லை என்பது இப்போது தெரியவருகிறது. அது அரசின் நலன்களுக்குக் கீழ்ப்படுத்தப்பட்டிருந்தது.
சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளால் ஆகஸ்ட் 7 அன்று கையெழுத் திடப்பட்ட மக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம், ஒரு நாட்டின் மீதான தாக்குதல் அனைத்து நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்ற கொள்கையை முறைப்படுத்தியது. கூட்டணிகள் ஒன்றும் புரியாத புதிர்கள் அல்ல: அச்சமடைந்த அரசுகள் பாதுகாப்புக்கான உத்தரவாதத்தைத் தேடுகின்றன. ஆனால், இன்னும் வெளிப்படுத் தக்கூடிய அம்சம் என்னவென்றால், இந்த மூலோபாய ஏற்பாடு எவ்வளவு விரைவாக இறையியல் மொழியில் பொதியப்பட்டுள்ளது என்பதே.
மக்காவையும் மதீனாவையும் பாதுகாப்பது ஒரு மதக் கடமை என்று பாகிஸ்தானிய உலமாக்கள் கருதுவது இதில் புதுமையானதல்ல. புனித நகரங்களைப் பாதுகாப்பதற்கும் சவூதி அரசியல் ஆட்சிமுறையைப் பாதுகாப்பதற்கும் இடையிலான வேறுபாட்டை, அரசுக்கு நெருக்கமான மூத்த மதகுருமார்கள் இவ்வளவு விரைவாக மங்கச் செய்திருப்பதே புதுமையானது.
பாகிஸ்தான் உலமா கவுன்சிலின் தலைவரான ஹாஃபிஸ் முஹம்மது தாஹிர் அஷ்ரஃபி, ஹூதிகளுக்கு “இஸ்லாத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை” என்று அறிவிக்கும் அளவுக்குச் சென்றார். இதன்மூலம் புவிசார் அரசியல் மோதலை மதரீதியான நியாயத்தன்மையைச் சோதிக்கும் ஒன்றாக மாற்றினார்.
முஃப்தி முஹம்மது தகி உஸ்மானியின் தலையீடு, இதே இயக்கவியலை வேறொரு கோணத்தில் வெளிப்படுத்துகிறது. முஸ்லிம் உலகின் மிகச் சிறந்த சட்டவியல் அறிஞர்களில் ஒருவரான அவர், சவூதி அரேபியாவுக்கு இன்னும் முழுமையான ஆதரவை வழங்கத் தவறியதற்காக வாஷிங்டனை விமர்சித்தார். இதில் உள்ள முரண்பாடு கடுமையானது: வாழ்நாள் முழுவதும் இஸ்லாமியச் சட்டவியலில் பயிற்சி பெற்ற ஒரு அறிஞர், முஸ்லிம் சமூகங்களை ஆதிக்கம் செலுத்துவதற்காக ஓர் ஏகாதிபத்திய சக்தியைக் கண்டிப்பதற்குப் பதிலாக, ஒரு சர்வாதிகார முடியாட்சிக்கு அது போதிய உதவி செய்யவில்லை என்று குற்றம்சாட்டுகிறார். இல்ம் எனப்படும் இஸ்லாமிய அறிவு மரியாதைக்குரியதாக இருக்கலாம்; ஆனால் அது அந்த அறிவைப் பெற்றவரை அதிகாரத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதில்லை.
ஆட்சியின் இறையியல் நம்பியிருக்கும் தந்திரம் இதுதான்.
மக்காவுக்கும் மதீனாவுக்கும் புனித அந்தஸ்து உண்டு; ஆளும் அரச குடும்பத்துக்கு அத்தகைய அந்தஸ்து இல்லை. இருப்பினும், முடியாட்சியின் பாதுகாப்பும் இஸ்லாத்தின் பாதுகாப்பும் சொல்லாடல் ரீதியாக ஒன்றிணைக் கப்பட்டுவிட்டால், வெளியுறவுக் கொள்கை ஒருவகையான தெய்வீகப் பாதுகாப்பைப் பெற்றுவிடுகிறது.
ரியாத்துக்கு எதிரான எதிர்ப்பு, ஹரமைனுக்கு எதிரான பகைமையாக மாற்றப்படுகிறது; இராணுவத் தலையீடு மதக் கடமையாகச் சித்தரிக்கப்படுகிறது; புவிசார் அரசியல் எதிரிகள், ஏற்றுக்கொள்ளத்தக்க இஸ்லாத்தின் எல்லைகளுக்கு வெளியே தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு, புனித மொழி அரசின் அதிகார நலன்களைப் பாதுகாக்கும் கருவியாக மாற்றப்படுகிறது.
இதில் உள்ள முரண்பாடு இன்னும் வியப்பூட்டுவது என்னவென்றால், இன்று தனது பாதுகாப்புக்காக அணிதிரட்டப்படும் மதகுருமார்களின் அமைப்பையே முகமது பின் சல்மான் பல ஆண்டுகளாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றார். சுதந்திரமான மத அதிகாரம் ஒடுக்கப்பட்டது; சமூகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன; சுற்றுலா, பொழுதுபோக்கு மற்றும் நுகர்வுக் கலாசாரத்துக்கான மையமாக அந்த ராஜ்ஜியம் உலகளாவிய முதலீட்டாளர்களுக்காக மறுவடிவமைக்கப்பட்டது. மதம் சடங்குகளுக்குள் நிலைத்திருக்கலாம்; ஆனால் அது இரவு விடுதிகளுக்கும், பிரம்மாண்ட வளர்ச்சித் திட்டங்களுக்கும் அல்லது முதலீட்டு மாநாடுகளுக்கும் தடையாக இருக்கக் கூடாது.
பின்னர் ஆபத்து வந்தது; திடீரென உம்மத்துக்கு அவசர அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நகைச்சுவையான முரண்பாடு முஸ்லிம் மக்களின் கவனத்திலிருந்து தப்பவில்லை. அரபு மற்றும் முஸ்லிம் அரசியல் விவாதங்களில், சவூதியின் புவிசார் அரசியல் நலன்களே ஓர் இஸ்லாமிய அவசரநிலை என்று அரசுக்கு ஆதரவான மதகுருமார்கள் மிகவும் தீவிரமாக அறிவிப்பதைப் பார்த்து, மக்கள் வியப்புடனும் அவநம்பிக்கையுடனும் எதிர்வினையாற்றியுள்ளனர். இத்தகைய அரசியல் நாடகத்துக்கு அது தகுந்த எதிர்வினையே.
மக்காவைப் பாதுகாப்பதற்கும், அதற்கு அருகிலுள்ள நகரத்தில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஓர் அரசியல் ஆட்சிமுறையைப் பாதுகாப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை மக்கள் புரிந்துகொள்ள முடியும். அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அங்கிகள், மாநாட்டு மேடைகள் அல்லது கவனமாக வெளியிடப்படும் அறிக்கைகள் எத்தனை இருந்தாலும், அந்த வேறுபாட்டை அழித்துவிட முடியாது.
அன்சாருல்லாஹ்வுடன் ஒப்பிடும்போது இந்த முயற்சி இன்னும் சங்கடமானதாகிறது.
அதன் ஒட்டுமொத்த அரசியலை ஒருவர் எவ்வாறு மதிப்பிட்டாலும், 2023 அக்டோபருக்குப் பிறகு முஸ்லிம் அரசியல் கற்பனையில் அன்சாருல்லாஹ்வின் இடம் மாறியது. ஏனெனில், பெருமளவில் செல்வந்தர்களாக இருக்கும் பெரும்பாலான முஸ்லிம் அரசாங்கங்கள் வெளிப்படையாகச் செய்யத் தவறிய ஒன்றை அது செய்தது: காஸாவுக்காகப் போராடுவதாகக் கூறி, நடைமுறையில் பொருளாதார மற்றும் மூலோபாயச் செலவுகளை ஏற்படுத்தியது.
செங்கடல் பகுதியில் அது நடத்திய நடவடிக்கைகள், பத்தாண்டுகளுக்கும் மேலாக சவூதி தலைமையிலான இரக்கமற்ற குண்டுவீச்சுகளாலும் போராலும் சீரழிக்கப்பட்ட ஏழை நாடான யேமனை, இஸ்ரேலையும் அதன் ஆதரவாளர்களையும் எதிர்கொள்ள அதிக விருப்பமுள்ள நாடாகக் காட்டின. அதுவும், பிரம்மாண்டமான இராணுவங்கள், இறையாண்மைச் செல்வ நிதியங்கள் மற்றும் பல தசாப்தங்களாகச் சேர்த்துவைக்கப்பட்ட இராணுவத் தளவாடங்களைக் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது.
இந்த அடையாளம் முக்கியத்துவம் பெற்றது. அன்சாருல்லாஹ்வின் மக்கள் ஆதரவு அதன் பாரம்பரிய ஆதரவுத் தளத்தைத் தாண்டி அதிகரித்தது. பாலஸ்தீனியர்களிடையே ஹூதிகள் மீதான குறிப்பிடத்தக்க ஒற்றுமை உணர்வும், பாராட்டும், அரசியல் நெருக்க உணர்வும் உருவானது. அரபு மற்றும் முஸ்லிம் உலகின் பரந்த அரசியல் உரையாடல்களில், யேமனின் நிலைப்பாடு ஒரு கசப்பான உண்மையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. அரண்மனைகளில் அதிகாரம் செலுத்துவோர் எதிர்கொள்ள விரும்பாத அந்த உண்மை இதுதான்: மிகக் குறைந்த வளங்களைக் கொண்ட யேமன், காஸாவுக்காக மிகப் பெரிய ஆபத்துகளை எதிர்கொள்ளத் துணிந்தது; ஆனால், அளவற்ற செல்வமும் வலிமையான இராணுவங்களும் கொண்ட முஸ்லிம் நாடுகள் அவ்வாறு செய்யத் தயாராக இருக்கவில்லை.
இப்போது, உண்மையான இஸ்லாமிய அவசரநிலை யேமன்தான் என்று விளக்குவதற்காக உலமாக்கள் வந்துள்ளனர்.
இங்குள்ள பிரச்சினை ஒரு மதகுருவுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. மதக் கல்வியும் அறிஞர்களின் அதிகாரமும் சர்வாதிகார அதிகாரத்தின் துணைப் பிரிவாக மாறும்போது, அவை மீண்டும் மீண்டும் சீரழிவதுதான் பெரிய பிரச்சினை. ஆளும் ஆட்சியாளர்களுக்கு எப்போது திட்டவட்டமான மதக் கட்டளைகள் தேவைப்படுகின்றனவோ, அப்போதெல்லாம் அவற்றைக் கண்டுபிடிப்பதில் அரசமைப்புடன் இணைந்த பல அறிஞர்கள் வல்லுநர்களாகிவிட்டனர். அவர்களுடைய சட்டவியல் விளக்கங்கள் மர்மமான வகையில் அரண்மனையை நோக்கி வளைந்துகொள்கின்றன; அதிகாரத்துக்கு நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க, அவர்களுடைய தார்மீக அவசரமும் தீவிரமடைகிறது.
காஸா எரிந்துகொண்டிருந்தபோது, எச்சரிக்கையுடன் நடந்துகொள்வதற்குத் தத்துவார்த்தமான மத விளக்கங்கள் வழங்கப்பட்டன. சவூதி அரேபியா அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, தெளிவின்மை திடீரென மறைந்துவிடுகிறது.
இதனால்தான் மதப்பிரிவுவாதம் அரசியல்ரீதியாகப் பயனுள்ளதாக இருக்கிறது. அது மேலிருந்து கீழாகச் செல்லும் அதிகாரம் குறித்த கேள்விகளை, மக்களிடையே ஒருவருக்கொருவர் எதிரான வெறுப்பாக மாற்றுகிறது. செல்வத்தை யார் வைத்திருக்கிறார்கள், இராணுவங்களுக்குக் கட்டளையிடுவது யார், அரசைக் கட்டுப்படுத்துவது யார், வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பது யார் என்று கேட்பதற்குப் பதிலாக, மற்ற முஸ்லிம்கள் போதுமான அளவுக்கு முஸ்லிம்களாக இருக்கிறார்களா என்று விவாதிக்கச் சாதாரண முஸ்லிம்கள் தூண்டப்படுகிறார்கள். மதக் கோட்பாடுகள் குறித்த குற்றச்சாட்டுகளின் கீழ் அரசியல் பொருளாதாரம் மறைக்கப்படுகிறது. பொதுமக்கள் மதமாறியவர்கள் யார் என்று வாதிடும்போது, அரண்மனை எந்தப் பாதிப்புமின்றித் தப்பித்துக்கொள்கிறது.
இவை அனைத்துக்கும் அடியில், இன்றைய சர்வாதிகார அரசியல் முன்வைக்கும் மிகப்பெரிய போலித் தேர்வு ஒன்று உள்ளது: தக்ஃபீரிசமா அல்லது ஜெனிஃபர் லோபெஸா? மதப் பிரசங்கமா அல்லது இசை நிகழ்ச்சியா? சமூக ஒடுக்குமுறையா அல்லது நுகர்வுக் கலாசாரத்தின் மூலம் அரசியலற்றவர்களாக மாற்றப்படுவதா? மதத்தின் அலங்காரத்துடன் கூடிய கீழ்ப்படிதலா அல்லது மேடை விளக்குகளால் ஒளிரும் கீழ்ப்படிதலா?
ஒருபோதும் வெளிப்பட அனுமதிக்கப்படக் கூடாதது மூன்றாவது சாத்தியக்கூறுதான்: செல்வ மறுபகிர்வு, சமூக நீதி, ஜனநாயகப் பொறுப்புக்கூறல், பாலஸ்தீன விடுதலை, மக்கள் இறையாண்மை, அரண்மனை மதகுருமார்களிடமிருந்தும் தன்னலக் குழுக்களின் மூலதன ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை.
உண்மையில், அதிகாரம் குவிக்கப்பட்டிருக்கும் அமைப்பு அஞ்சுவது இந்த மாற்று வழியைத்தான்.
எனவே, மக்கா ஒப்பந்தம் ஒரு புதிய இராணுவக் கூட்டணியை மட்டும் வெளிப்படுத்தவில்லை. புனித மொழியின் அரசியல் பொருளாதாரத்தையும் அது வெளிப்படுத்துகிறது. ஆட்சியின் நியாயத்தன்மை பலவீனமடையும்போது, இஸ்லாம் அழைக்கப்படுகிறது. அதிகாரத்துக்கு வலுவூட்ட வேண்டியபோது, உலமாக்கள் களமிறங்குகிறார்கள். அதிகாரம் குறித்த சங்கடமான கேள்விகள் எழும்போது, அவற்றிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப மதப்பிரிவுவாதம் பயன்படுத்தப்படுகிறது.
தக்ஃபீரிசமா அல்லது ஜே. லோவா?
நீதியைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்பதுதான் போலும்.
*ஜெனிஃபர் லோபெஸ்
ஜுனைத் எஸ். அஹ்மத்
பேராசிரியர் ஜுனைத் எஸ். அஹ்மத், சட்டம், மதம் மற்றும் உலக அரசியல் ஆகிய துறைகளைக் கற்பித்து வருகிறார். மேலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ள இஸ்லாம் மற்றும் காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுதலை பற்றிய ஆய்வு மையத்தின் (Center for the Study of Islam and Decolonization – CSID) இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.
அவர், நியாயமான உலகத்திற்கான சர்வதேச இயக்கம் (International Movement for a Just World), நக்பாவிலிருந்து விடுதலைக்கான இயக்கம் (Movement for Liberation from Nakba), மற்றும் மனிதகுலத்தையும் பூமிக் கோளையும் காப்பாற்றும் இயக்கம் (Saving Humanity and Planet Earth) ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.

No comments:
Post a Comment