By SammiI Majeed

“ஒவ்வொரு நாள் காலையில் எழும்போதும் இது கடன் வாங்கிய மற்றொரு நாள் என்றே கருதுகிறேன்.
உரையாற்றுவதற்காகவோ, எனது அமைப்புரீதியான சந்திப்புகளுக்கோ, வேறு எந்த வேலைக்காகவோ நான் எந்த நகருக்குச் சென்றாலும் எனது ஒவ்வொரு அசைவையும் சில கறுப்பர்கள் கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள்; என்னைக் கொல்வதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.
அவர்களுக்குச் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றன என்பது எனக்குத் தெரியும். இதனை நான் பலமுறை பொதுவெளியில் கூறியிருக்கிறேன்.
யாராவது நான் சொல்வதை நம்பவில்லை என்றால் அவருக்கு நேஷன் ஆஃப் இஸ்லாமில் உள்ள முஸ்லிம்களைப் பற்றித் தெரியவில்லை என்றே சொல்வேன்.
ஆனால், நான் எப்படி அர்ப்பணிப்புணர்வுடன் எலிஜா முஹம்மதைப் பின்பற்றினேனோ அதேபோன்று என்னையும் அர்ப்பணிப்புணர்வுடன் பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள்.
ஒரு மனிதனை வேட்டையாட விரும்புபவர்கள் நினைவில் ஒன்றை வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு காட்டில் வேட்டையாடுபவர்களை வேட்டையாடும் மக்களும் இருக்கிறார்கள் என்பதுதான் அது.
நான் வெள்ளை இனவெறியர்களின் கரங்களால் திடீரென்று கொல்லப்படலாம் என்பதும் எனக்குத் தெரியும். அல்லது நான் வெள்ளையர்களால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட நீக்ரோக்களின் கரங்களாலும் கொல்லப்படலாம். அல்லது மூளைச்சலவை செய்யப்பட்ட ஒரு நீக்ரோவினால் அவனாகவே முடிவெடுத்தும் நான் கொல்லப்படலாம்.
எப்படி இருந்தாலும் சரி. இப்பொழுது நான் ஒவ்வொரு நாளும் மரணித்தவன்போல்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இந்நூலின் இறுதி வடிவத்தை வாசிக்கும்வரை நான் உயிரோடிருப்பேனா என்பது எனக்குத் தெரியாது.
நான் சொல்வது தவறு என்று எண்ணுவீர்களானால் என்னைச் சற்றுக் கண்காணியுங்கள். அந்த வெள்ளையன், தன் பத்திரிகையில் என்னை ‘வெறுப்பை’ வைத்துதான் அடையாளப்படுத்தப்போகிறான்.
இப்பொழுது உயிரோடு இருக்கும்போது வெறுப்பின் அடையாளத்துடன் என்னை எப்படிப் பயன்படுத்துகிறானோ அப்படியேதான் நான் இறந்த பின்னும் என்னைப் பயன்படுத்துவான்.
நீங்கள் பார்த்துக்கொண்டிருங்கள். நான் ‘பொறுப்பற்ற’ கறுப்பன் என்றே மிகச் சிறப்பாக முத்திரை குத்தப்படுவேன். நான் இந்தக் குற்றச்சாட்டை எப்பொழுதும் உணர்ந்திருக்கிறேன்.
ஒரு கறுப்பினத் தலைவரை வெள்ளையர்கள் ‘பொறுப்புள்ளவர்’ என்று போற்றினால் அந்தக் கறுப்பினத் தலைவரால் ஒருபோதும் நல்ல விளைவுகளை ஏற்படுத்த முடியாது. ஒரு கறுப்பர் வெள்ளையர்களால் ‘பொறுப்பற்றவர்’ என்று முத்திரை குத்தப்பட்டால், அவர் தனது பணியைச் செவ்வனே செய்கிறார் என்று அர்த்தம். உண்மையில் சொல்லப்போனால், நான் சிறுவனாக இருக்கும்போதே இதனை அறிந்துகொண்டேன்.
இந்த இனவெறி பிடித்த அமெரிக்கச் சமூகத்தில் நானும் ஏதோ ஒரு வகையில் கறுப்பர்களின் தலைவர் என்ற முறையில் ஒன்றை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டேன். எப்போதெல்லாம் நான் வெள்ளையர்களால் எதிர்க்கப்படுகிறேனோ, எப்போதெல்லாம் நான் வெள்ளையர்களால் தாக்கப்படுகிறேனோ அப்போதெல்லாம் நான் அமெரிக்கக் கறுப்பர்களின் நலனுக்கான சரியான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறேன் என்பதுதான் அது!
ஒரு வெள்ளையன் என்னை எதிர்க்கிறான் என்றால் எனக்குத் தானாகவே தெரிந்துவிடும், நான் கறுப்பருக்கு ஏதோ நன்மை செய்திருக்கிறேன் என்று.
ஆம்! நான் என் பேச்சுத்திறமையின் பங்கினைப் பெரிதும் நேசித்தேன்.
சமூகங்களின் மாற்றங்களுக்காக உழைப்பவர்களை அந்தச் சமூகங்களே பெரும்பாலும் கொலை செய்திருக்கின்றன என்பதையும் நான் அறிவேன்.
நான் அமெரிக்கா என்ற உடலில் புரையோடிப்போயிருக்கும் இனவெறி என்ற புற்றுநோயை அகற்றுவதற்காக உதவிசெய்யும் வகையில், சிறியதொரு வெளிச்சத்தைக் கொண்டுவந்திருந்தால், ஏதாவது அர்த்தம் உள்ள ஓர் உண்மையை வெளிப்படுத்தியிருந்தால், அந்தப் பெருமை எல்லாம் நிறைந்த அல்லாஹ்வையே சாரும். குறைகள் மட்டுமே என்னைச் சாரும்!”
மால்கம் X என்ற மாலிக் அஷ்ஷாபாஸ் இந்நூலில் குறிப்பிட்டுள்ளதைப் போல, இந்த நூலின் இறுதி வடிவத்தைக் காண்பதற்கு முன்பாகவே கொல்லப்பட்டுவிட்டார். ஆம்! இந்நூல் வெளிவரும்போது அவர் ஷஹீது ஆகிவிட்டார்.
1965, பிப்ரவரி 21ஆம் தேதி மால்கம் X நியூயார்க் நகரின் ஆடுபோன் அரங்கத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபொழுது மேடையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்; அல்ஹாஜ் மாலிக் அஷ்ஷாபாஸ் ஷஹீது மாலிக் அஷ்ஷாபாஸ் ஆனார்!
அவரது 39ஆம் வயதில் அல்லாஹ் அளித்த அருட்பேறு அவருக்கு அப்படி அமைந்தது!
No comments:
Post a Comment