Friday, February 01, 2019

கல்விப் பணிக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்த இஸ்லாமிய சிந்தனையாளர்


இருபதாம் நூற்றாண்டில் இஸ்லாமிய சிந்தனையாளராகவும், எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், தத்துவஞானியாகவும் விளங்கிய ஆயத்துல்லாஹ் முர்தஸா முதஹ்ஹரி 1919 ஜனவரி 31ஆம் திகதி ஈரானின் கொராஸான் மாகாணத்தின் மஷ்ஹத் நகருக்கருகிலுள்ள கிராமத்தில் சன்மார்க்கக் குடும்பமொன்றில் பிறந்தார். தனது சொந்த ஊரில் அடிப்படைக் கல்வியைப் பெற்ற இவர் அல்குர்ஆன் மீதும் இஸ்லாமிய போதனைகள் மீதும் கொண்ட ஆர்வம், அவரை மஷ்ஹத் சன்மார்க்கக் கல்லூரியில் சேர வழிவகுத்தது. அவர் உயர்கல்விக்காக 1937 இல் கும் நகரிலுள்ள புகழ்பெற்ற சன்மார்க்கக் கல்லூரியில் இணைந்தார். அங்கு அல்லாமா செய்யத் முகம்மது ஹுசைன் தபதாபாய் (ரஹ்) உட்பட பல அறிஞர்களிடமும் குறிப்பாக ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் தந்தை இமாம் கொமைனி (ரஹ்) அவர்களிடமும் கல்வி கற்றார்.
இவரது கூர்மையான நுண்ணறிவு, திறமை மற்றும் விடாமுயற்சி ஆகியன அவரை கல்லூரியின் சிறந்த மாணவராகத் திகழச் செய்தது. கும் சன்மார்க்கக் கல்லூரியில் 12 ஆண்டுகள் கற்ற இவர் இமாம் கொமைனியிடம் அறநெறி, மெய்யியல், மறைஞானம், சட்டங்கள் மற்றும் கோட்பாடு ஆகியவற்றைக் கற்றுத்தேர்ந்தார். குறுகிய காலத்திலேயே குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சுயமாக விளக்கமளிக்கக்கூடிய 'முஜ்தஹித்' நிலையை அடைந்த அவர் நன்கு அறியப்பட்ட ஆசிரியர்களில் ஒருவரானார்.
இவர் 1950இல் கொராஸானின் முன்னணி ஆலிம் ஒருவரின் மகளை மணந்து கொண்டார். திருமணத்துக்கு முன்பும் பின்பும் வறுமையில் வாழ்ந்த அவர் உள்ளதைக் கொண்டு திருப்தியாக வாழ்ந்தார். தனது அறிவார்ந்த மற்றும் கலாசார நடவடிக்கைகளைத் தொடரவென 1952 இல் அவர் தெஹ்ரானுக்கு இடம்பெயர்ந்தார். தெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் நிகழ்த்திய அவர், விஞ்ஞானம், அரசியல், ஒழுக்கவியல் மற்றும் வரலாற்றுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதி வெளியிட்டார்.
அவர் கல்வி நடவடிக்கைகளோடு அரசியல் செயற்பாடுகளிலும் தீவிரமாக ஈடுபட்டார். 1963 ஜூன் 5 அன்று ஷா மன்னரினால் இமாம் கொமைனி கைது செய்யப்பட்டார். அதற்கு எதிராக ‘கொர்தாத் எழுச்சி’ போராட்டத்தை ஏற்பாடு செய்வதில் முன்னணி வகித்த இவர், ஷாவுக்கு எதிராக உணர்ச்சிகரமான பேச்சைத் தொடர்ந்து முன்னெடுத்தார். அதனால் அவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். எனினும் பொதுமக்களின் அழுத்தம் காரணமாக ஒரு மாதம் கழிந்த பின்னர் ஏனைய உலமாக்களுடன் சேர்த்து அவரும் விடுதலையானார்.
அதனைத் தொடர்ந்து சமூக தேவைகளை உள்ளடக்கிய புத்தகங்களை எழுதினார். பல்கலைக்கழகங்களில் விரிவுரைகளை நடத்தினார். தெஹ்ரானிலுள்ள முக்கிய பள்ளிவாசல்களில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.
இவரது பேனா பிழையான சிந்தனைகளுக்கும் சமூக அநீதிகளுக்கும் எதிராகவே எழுதியது. அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் இஸ்லாத்தை பாதுகாக்க தன்னால் முடிந்த எந்த முயற்சியையும் அவர் விட்டு வைக்கவில்லை. இஸ்லாமிய இயக்கத்தை ஊக்குவிப்பதன் ஊடாக, இஸ்லாத்துக்கு எதிரான சதிகளை முறியடிக்கலாம் என்று இவர் உறுதியாக நம்பினார்.
1967 இல் இஸ்ரேல், அரபு நாடுகள் மீது திணித்த 6 நாள் யுத்தத்தில் புனிதத்தலமான பைத்துல் முகத்திஸ் உட்பட பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பெரும் நிலப்பகுதியையும் ஆக்கிரமித்துக் கொண்டது. அதன்போது பலஸ்தீனர்களுக்கு அவசியமான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு ஈரானிய மக்களை இவர் கோரினார். அதனால் பஹ்லவி ஆட்சியாளர்களால் அவர் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார்.
பலஸ்தீன் ஆக்கிரமிக்கப்பட்டமை தொடர்பில் அவர் ஆற்றிய உருக்கமான உரையில், “அல்லாஹ்வின் முன்பாகவும், முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்பாகவும் நாம் பெறுமானமுடையவர்களாக காணப்பட வேண்டுமாயின், உலக நாடுகளால் நாம் மதிக்கப்பட வேண்டுமாயின், சக முஸ்லிம் சகோதரர்களுடன் நாம் அணிதிரள வேண்டும். முஹம்மத் (ஸல்) அவர்கள் இன்று உயிரோடு இருந்தால், அவர் என்ன செய்திருப்பார்? என்று சிந்தித்துப் பாருங்கள்? அல்லாஹ்வின் மீது ஆணையாக, றஸூலுல்லாஹ்வின் ரூஹ் இஸ்ரேலியரின் இந்த கொடுமை கண்டு சபிப்பதாகவே இருக்கிறது.
இஸ்ரேலின் இந்த அத்துமீறலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதிருப்பவர்கள் பாவமிழைப்பவர்களாகவே விளங்குகின்றனர். இது குறித்து பேசாதிருந்தால் நிச்சயமாக, நானும் பாவமிழைக்கின்றவனாகவே இருப்பேன். எந்த உலமாவும் இது குறித்து பேசாதிருப்பாராயின் அவர்களும் பாவமிழைப்பவரேயாவர். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாம் ஒரு பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளோம், ஆயினும் அதனை நாம் நிறைவேற்றாதுள்ளோம்' என்றார்.
இவரது இந்த உரை சமூகத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவ்வுரையின் பிரதிகள் அச்சிடப்பட்டு நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டன. ஈரான் இஸ்லாமிய புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து ஈரானிய ஊடகங்கள் இதனை அடிக்கடி ஒளிபரப்பு செய்து, ஒடுக்கப்பட்ட பலஸ்தீனர்களுக்கான ஆதரவைத் தெரிவித்தன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், தெஹ்ரானின் முக்கிய பள்ளிவாசல்களில் மக்களை எழுச்சி பெறச்செய்யும் உரைகளை தொடர்ந்தும் நிகழ்த்தினார். 1974ம் ஆண்டளவில் ஷாவின் அரசினால் அவரின் உரைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இத்தடை 1979 இல் இஸ்லாமியப் புரட்சியின் வெற்றி வரை நீடித்தது.
அதேநேரம் இவர், இமாம் கொமைனியுடன் அவர் ஈராக்கில் 14 ஆண்டுகள் அஞ்ஞாதவாசம் இருந்த போது கடிதங்கள் மூலமும் வேறு தொலைத்தொடர்புகள் ஊடாகவும் மேற்கொண்டார்.
1976இல் இமாம் கொமைனியை நஜாப் நகரில் நேரடியாக சந்தித்த இவர், இஸ்லாமிய புரட்சியின் அவசியம் குறித்து இருவரும் கலந்துரையாடினர். இமாம் கொமைனி ஈராக்கில் இருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டதால் பிரான்சில் தஞ்சமடைந்தார். அப்போது ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரியும் அங்கு சென்று இம்மாமுடன் இணைந்துகொண்டார். ஈரானின் இஸ்லாமியப் புரட்சியின் வெற்றி வரை முதஹ்ஹரி இமாமின் நெருங்கிய சகாவாகவும், ஆலோசகராகவும் செயல்பட்டார். இஸ்லாமிய குடியரசை நிறுவிய பின்னர் 1979ம் மே 2ம் திகதி தெஹ்ரானில் இடம்பெற்ற கருத்தியல் மற்றும் அரசியல் தொடர்பான முக்கிய கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்புகையில் அவர் ஷஹீதாக்கப்பட்டார்.
http://www.thinakaran.lk/2019/01/31

No comments:

Post a Comment