டேனியல் மப்சூத் ( Daniel Mabsout)
தமிழில்: நாவலப்பிட்டி முஹம்மத் றஸீன்
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் மூன்று ஆண்டுகள் மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹொஸ்னி முபாரக் தற்போது அங்கிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அரபு வசந்த காலத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதற்கான கட்டளைகளை பிறப்பித்த குற்றத்திலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனால் முபாரக் தனது தவணைக் காலத்தை முடித்துக்கொண்டு ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்கவென அல் ஜதிதாவில் அவரது இல்லத்திற்கு திரும்பியுள்ளார். ஹஜ் கடமையை நிறைவேற்றுவதன் மூலம் அதனைத் தொடங்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்த அரபு வசந்தம் எகிப்துக்கு புதிய வாழ்க்கையை கொண்டு வரவில்லை என்றே சொல்ல வேண்டும். முபாரக் அகற்றப்பட்டாலும் கூட அங்கு மறுபிறப்பு ஒன்று இல்லை. உலக ஒழுங்கு ஏற்கனவே முபாரக்கின் வாரிசைத் தெரிவு செய்தே இருந்தது. ஒரு இடைமாறும் காலத்திற்கு பிறகு அது சாத்தியமானது.
அதாவது ஜனாதிபதி முர்சி உண்மையான வாரிசு கடந்து வரும் ஒரு பாலமாகவே இருந்தார். உண்மை என்னவென்றால், முபாரக்குக்கு பின்னர் ஒரு இராணுவ ஆட்சியை ஏற்படுத்துவது பொருத்தமானதாக இருக்கவில்லை. புரட்சி என்று அழைக்கப்படும் ஒன்றை இராணுவ எதேச்சாதிகாரத்தின் மூலம் பதிலீடு செய்வது சரியாக இருக்காது எனக் கருதப்பட்டது. எனவே ஒரு இடைமாறும் காலம் அவசியமாக இருந்தது. அது ஜனாதிபதி முர்சி மூலம் சாத்தியமானது.
முர்சியும் சரி முஸ்லிம் சகோதரத்துவ இயக்கமும் சரி உலக ஒழுங்கின் போக்கை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் பொருத்தமானவர்கள் என்பதால், அவர்கள் வேட்பாளராகவே தெரியப்பட்டுள்ளனர் என எண்ணினர். அது அவர்களை ஒரு முடிவுக்குக்கு கொண்டுவருவற்கு விரிக்கப்பட்ட வலை என்பதை அவர்கள் உணரவில்லை. ஏனெனில் அவர்கள் எகிப்துக்கு ஏனைய கட்சியினர் பிரதிநிதித்துவம் செய்யாத சுதந்திரம் மற்றும் சுயாட்சிக்கான ஒரு சாத்தியப்பாட்டையே பிரதிநிதித்துவம் செய்தனர்.
முர்சி ஆட்சி செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று கூறுவதற்கான அவசியமே இல்லை, ஏனெனில் இதுவே உண்மை. ஆரம்பத்தில் இருந்து, அவர் தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்துவது தடுக்கப்பட்டே வந்தது. எனவே அவர் தனது சிறப்புரிமைகள் மற்றும் அதிகாரங்களை விரிவாக்கல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக, எகிப்தியர்கள், இதனை அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அத்துமீறல் எனக் கருதி அவர்மீது குற்றம் சாட்டி அவருக்கு எதிராக அணி திரண்டனர்.
உண்மையில், அவர் எகிப்து ஜனாதிபதியாக இருக்கவே முயற்சி செய்தார்.
அதற்காகவே அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதே உண்மையாகும். ஆனால் உலக ஒழுங்கு வேறொன்றைத் தீர்மானித்திருந்தது. முஸ்லிம் சகோதரத்துவவாதிகள் அல்லது இஸ்லாமிய கட்சிகள் வெறுமனே ஆட்சியிலிருந்து அகற்றப்படுவதற்கென்றே ஆட்சியில் அமர்த்தப்படுகின்றனர். அல்ஜீரியாவிலும் சோமாலியாவிலும் இதுவே நடந்தது. இதுவே எகிப்திலும் நடந்தேறியது. சரியான தருணத்தில் தூக்கி எறிவதற்கென்றே அவர்கள் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டனர்.
பெயரளவில் மட்டுமே எகிப்தில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பது நீண்ட நாட்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட தீர்மானமாகும். முபாரக்கின் அதிகாரம் அகற்றப்பட்டதற்கு ஒரே காரணம் அவருக்குப் பின் அவரது மகன் ஜமாலைப் பதவியிலமர்த்த அவர் எடுத்த தீர்மானத்தை நாடு தாங்காது என்பதுதான்.
ஏனெனில் முபாரக்கின் திட்டம் நிறைவேறி இருந்தால் எகிப்து உண்மையான எழுச்சியை எதிர்நேக்கியிருக்கும். எனவேதான் உலக வல்லாதிக்கம் எந்த விலை கொடுத்தாவது அதனைத் தவிர்க்க விரும்பியது. இதற்காகவே ஒவ்வொரு அம்சத்திலும் ஒரு போலிப் புரட்சி பதாகையுடன் எகிப்திய வசந்தம் உருவாக்கப்பட்டது. மில்லியன் கணக்கான எகிப்தியர்களின் பேரணியுடன் பெற்ற வெற்றி வன்முறையாளர்களால் அரங்கேற்றப்பட்ட ஒரு இராணுவ சதிப் புரட்சியில் முடிந்தது.
மில்லியன் கணக்கான மக்களை ஒரு இராணுவ ஆட்சிக்கு அழைப்பு விடுப்பது என்பது நடைமுறை சாத்தியமில்லாததும் வியப்புக்குரிய விடயமுமாகும். ஆனால் இது வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மிகவும் சாதுர்யமாக வடிவமைக்கப்பட்டிருந்தது
அத்துடன் எகிப்திய சமூகம் உலக அளவிலான மிக வெளிப்படையான மற்றும் ஊடுருவக்கூடிய சமூகங்களில் ஒன்றாக இருந்ததும் அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. இதனால், மில்லியன் கணக்கான மக்கள் மாற்றத்துக்கான அழைப்புடன் மனுக்களில் கையெழுத்திட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைக் காண நேர்ந்தது. இது முபாரக் ஆட்சியின் போது புலனாய்வுத் துறைத் தலைவராக இருந்த ஒரு மூன்றாந்தர அதிகாரியின் கொடூர ஆட்சிக்கு அவர்களை இட்டுச் சென்றது!
எகிப்திய வசந்தம் என்பது இவ்வளவுதான். உண்மையாக எதுவுமே மாறவில்லை, இப்போது, எகிப்து புரட்சிக்கு நெருக்கமான ஒன்றைக் காண்பதற்கு இன்னும் பத்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே அரபு வசந்தம் என்பது கருக்கலைப்பு சிகிச்சை ஒன்றே அன்றி வேறில்லை.
இதுவரை நடந்தவற்றுக்கான உண்மையான விளக்கம் இதுவேயாகும். ஈரான், சிரிய ஆட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் உலக ஒழுங்கின் தயவைப் பெற முர்சி முழு முயற்சியை மேற்கொண்டார். அது பயனளிக்கும் எனவும் எதிர்பார்த்தார். ஆனால் அது வெறும் கானல் நீராயிற்று. தனக்கு சார்பாக பேசக்கூடியதாக இருக்கும் என எண்ணி இஸ்ரேலிய அதிகாரிகளிடம்கூட தொடர்பு கொண்டார். எர்டோகன் ஒரு போலி முஸ்லிம் சகோதரத்துவவாதி, ஆனால் அவர் ஒரு உண்மையான நேட்டோ சொத்து என்பதை மறந்து, அவரைப் போல தாம் உலக வல்லரசுகளால் பராமரிக்கப்பட்டு பதவி உயர்வும் வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்தார். எகிப்து முஸ்லிம் சகோதரத்துவவாதிகள் ஹமாஸ் இயக்கத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பதையும் அவர் மறந்துவிட்டார். எனவே, உலக ஒழுங்கு முதலாவதை அகற்றுவதன் மூலம், இரண்டாவதையும் இலகுவாக நீக்க முடியும் என நம்பியதில் ஒன்றும் வியப்பில்லை. அதன்மூலம், முஸ்லிம் சகோதரத்துவத்தை எகிப்து மற்றும் பாலஸ்தீனத்தில் இருந்து முற்றாக ஒழிப்பதே அவர்களது இறுதி இலக்காக இருந்தது.
இப்போது, முபாரக் சுதந்திர மனிதர் மட்டுமல்ல ஒரு ஆட்சியாளரும்கூட. அதாவது, அவர் அவரது புலனாய்வு துறை தலைவரும், இஸ்ரேலினதும் உலக ஒழுங்கினதும் இராணுவ இணைப்பாளரும், உலக ஒழுங்கு திட்டத்தின் படி மில்லியன் கணக்கான எகிப்தியர்கள் மூலம் ஆட்சிக்கு கொண்டு வரப்பட்ட பீல்ட் மார்ஷல் அப்தெல் பதாஹ் அல் சிசி, மூலம் இன்றும் ஆட்சி செய்கிறார்.
முபாரக் விடுதலையானார், மருத்துவமனையில் கழித்த 3 வருட தடுப்புக் காவலிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் முர்சிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலக ஒழுங்கு, இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு ஆயுதம் தாங்கிய போராட்டத்துடனான ஒரு நெருங்கிய தொடர்பை ஒருபோதும் மன்னிக்காது.
No comments:
Post a Comment