Sunday, October 18, 2026

மதச்சார்பின்மையின் வெற்றுக் கிரீடம்: இஸ்லாமும் நடுநிலைத்தன்மை எனும் மாயையும்

சலீம் மொஹமட் பதாத் (Salim Mohamed Badat)

மதச்சார்பின்மை, அதன் நவீன மேற்கத்திய வடிவத்தில், அனைத்து நம்பிக்கைகளும் அமைதியாக ஒன்றிணைந்து வாழக்கூடிய நடுநிலையான ஓர் இடமாகத் தன்னை முன்னிறுத்துகிறது. அது சகிப்புத்தன்மையை வழங்குவதாகக் கூறுகிறது. அல்லது, உண்மையில், அதன் மேலோட்டமான ஒரு வடிவத்தை வழங்குகிறது. பல்வேறு மதங்கள் செயல்படுவதற்கு அது அனுமதிக்கிறது. ஆனால், அந்த மதங்கள் அடிப்படையில் பகுத்தறிவற்றவை, காலத்துக்கு ஒவ்வாத பழமையானவை அல்லது முற்றிலும் தவறானவை என்ற முன்கணிப்பின் கீழேயே அவற்றை ஏற்றுக்கொள்கிறது.

மதச்சார்பின்மை, “அனைத்து மதங்களும் சரியானவை” என்று கூறுவதில்லை. மாறாக, “அனைத்து மதங்களும் சகித்துக் கொள்ளப்படுகின்றன; ஆனால் எந்த மதமும் உண்மையானதல்ல” என்று கூறுகிறது. அது மதத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்கிறது. அவ்வாறு செய்யும்போது, மதத்தின் உள்ளார்ந்த சாரத்தையும் வெறுமையாக்குகிறது.

மதச்சார்பின்மையின் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் வடிவம் மேற்கத்திய மதச்சார்பின்மையாகும். குறிப்பாக, அறிவொளிக் காலத்திலிருந்து (Enlightenment) உருவான மதச்சார்பின்மையே இதன் முக்கிய வடிவமாகும். இந்தச் சித்தாந்தம் திருச்சபையையும் அரசையும் பிரிப்பதை மட்டும் முன்மொழிவதில்லை; மாறாக, பொருள், அறநெறி மற்றும் அதிகாரம் ஆகியவற்றின் அடித் தளங்களையே மறுவரையறை செய்கிறது. சமூகங்கள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட வேண்டும், எது பகுத்தறிவுடையதாகக் கருதப்பட வேண்டும், இறுதியில் யார் ஆட்சி செய்ய வேண்டும் — மனிதனா அல்லது இறைவனா — என்பவற்றில் எந்தவித சமரசமுமின்றித் தனக்கே மேலாதிக்கம் இருப்பதாக அது உரிமை கோருகிறது.

இந்த மதச்சார்பற்ற தாராளவாத மாதிரியில், அரசு நடுநிலையானதல்ல; அது இறைவனைப் போன்ற அதிகாரத்தைத் தன்வசம் கொண்டதாகச் செயல்படுகிறது. அது தனது குடிமக்களின் வெளிப் படையான செயல்களை மட்டுமல்லாமல், அவர்களது இதயங்களில் உள்ள விசுவாசங்களையும் நுட்பமாகக் கண்காணித்து, கேள்விக்குட்படுத்துகிறது.

குறிப்பாக, அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கீழ்ப்படிதலையும், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் வழிநடத்தும் முழுமையான உலகக் கண்ணோட்டத்தையும் கொண்ட இஸ்லாம், வெறுமனே வேறுபட்ட ஒன்றாக மட்டுமல்லாமல், ஆபத்தான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. அப்போது அரசின் மறைமுகமான கேள்வி இதுவாகிறது: நீங்கள் குடியரசுக்குச் சொந்தமானவர்களா, அல்லது இறைவனுக்குச் சொந்தமானவர்களா?

உதாரணமாக, பிரான்சில் “அல்லாஹு அக்பர்” என்று முழங்குவது, இறைபக்தியின் வெளிப் பாடாகப் பார்க்கப்படுவதில்லை. மாறாக, அது ஓர் அச்சுறுத்தலாகவும், அரசின் மதச்சார்பற்ற புனிதத்தன்மைக்கு எதிரான அவமதிப்பாகவும் கருதப்படுகிறது.

மதச்சார்பின்மையின் இந்தத் தீவிர வடிவம், அரசையே தெய்வமாக வழிபடும் நிலையை உருவாக்குகிறது. பிரான்ஸ், பொது இடங்களில் மதத்தை வெளிப்படுத்துவதைக் கட்டுப்படுத் தியிருப்பதோடு மட்டுமல்லாமல், ஒருவரின் மதநம்பிக்கை அரசைவிட உயர்ந்தது என்ற உள்ளார்ந்த உறுதியைக்கூடக் குற்றமாக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. அது திருச்சபைக்குப் பதிலாக அரசை அமர்த்தி, “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற கொள்கைகளையே தனக்கென ஒரு மதமாக மாற்றியுள்ளது.

பிரிட்டிஷ் காலனித்துவச் சொல்லாடலான, “இந்தியனைக் கொன்று மனிதனைக் காப்பாற்ற விரும்புகிறோம்” என்ற கூற்று, இதே தர்க்கத்தை வெளிப்படுத்துகிறது. அதன் நோக்கம் வெறும் உடல்ரீதியான ஆதிக்கம் செலுத்துவது மட்டுமல்ல; மக்களின் உளவியலையும் அடிபணியச் செய்வதாகும்.

வெள்ளையர்களைப் போலச் சிந்திக்கின்ற, பழுப்புநிறத் தோலைக் கொண்ட பூர்வீக மக்களையே பிரிட்டிஷார் விரும்பினர். அவர்கள் தங்களது மூதாதையர்களின் வாழ்க்கைமுறைக்கோ அல்லது இறைவனுக்கோ விசுவாசமாக இருப்பதற்குப் பதிலாக, பேரரசுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதே அவர்களது விருப்பமாக இருந்தது. இதுவே மதச்சார்பின்மையின் உள்ளார்ந்த இயக்கவியல்: அது ஒருவரின் அடையாளத்தின் வெளிப்புறத் தோற்றத்தைப் பாதுகாப்பதுபோல் காட்டிக்கொண்டு, அதன் அடிப்படைச் சாரத்தை வெறுமையாக்குகிறது.

இன்று, மதச்சார்பற்ற நடுநிலைத்தன்மை என்ற பாசாங்கு சரிந்துவிட்டது. முகமூடி கழற்றப் பட்டுவிட்டது. மேற்கத்திய மதச்சார்பற்ற ஊடகங்களும் அரசியல் நிறுவனங்களும் இஸ்ரேலின் குடியேற்றக் காலனித்துவத் திட்டத்தைப் பாதுகாக்கும் விதத்தில் இதனை நாம் காண்கிறோம். இது அமைப்பில் ஏற்பட்ட ஒரு தற்செயலான குறைபாடு அல்ல; மாறாக, அந்த அமைப்பின் இயல்பிலேயே உள்ள ஓர் அம்சமாகும்.

கடந்த நூற்றாண்டில், மேற்கத்திய தாராளவாதம் கிறித்தவத்தையும் யூத மதத்தையும் ஒன்றிணைத்து, “யூத-கிறித்தவ மரபு” (Judeo-Christian tradition) என்று அழைக்கப்படும் ஒரு கருத்தை உருவாக்குவதற்கு அதிகளவில் முயன்றுள்ளது. இதன் மூலம், சியோனிச அதிகாரத்தை மேற்கத்திய அறநெறி அடையாளத் தின் மையத்தில் நிலைநிறுத்துகிறது.

அமெரிக்க சியோனிஸ்டுகளின் செல்வாக்கின் மூலம், இருபதாம் நூற்றாண்டில் இந்தக் கூட்டிணைவு மேலும் வலுப்பெற்றது. அவர்கள் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் அளப்பரிய செல்வாக்கைக் கொண்டுள்ளனர். இதன் விளைவாக, முஸ்லிம்கள் நீதி, பலஸ்தீனம் அல்லது இறைவனின் இறையாண்மை குறித்து குரல் எழுப்பும்போது, பன்மைத்துவ விவாதத்தில் பகுத்தறிவுடன் பேசும் குரல்களாக அவர்கள் சித்தரிக்கப்படுவதில்லை. மாறாக, அவர்கள் “தாராளவாத உலக ஒழுங்கின்” எதிரிகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள்.

இஸ்லாத்தின் மேன்மை: அறநெறி மற்றும் மெய்யியல் அடிப்படையிலான ஒரு கட்டமைப்பு

மதச்சார்பின்மையைப் போலல்லாமல், இஸ்லாம் நடுநிலைத்தன்மையை முன்வைப்பதில்லை. அது உண்மையை முன்வைக்கிறது. பல வாழ்க்கை முறைகளில் ஒன்றாகத் தன்னைப் பாசாங்கு செய்வதில்லை. மாறாக, அனைத்தையும் படைத்த இறைவனால் விதிக்கப்பட்ட வாழ்க்கை நெறியாகத் தன்னை முன்வைக்கிறது.

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:

“நிச்சயமாக, அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப் பட்ட மார்க்கம் இஸ்லாமே.” (அல்குர்ஆன் 3:19)

மதச்சார்பின்மை வாழ்க்கையை அரசியல், அறநெறி, பொருளாதாரம் மற்றும் மதம் என ஒன்றுக்கொன்று போட்டியிடும் தனித்தனி துறைகளாகப் பிரிக்கிறது. ஆனால், இஸ்லாம் அவற்றைத் தவ்ஹீத் — அல்லாஹ் ஒருவனே என்ற ஏகத்துவக் கொள்கையின் கீழ் ஒன்றிணைக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பொது வாழ்க்கைக்கும் இடையில், ஆன்மிகத்திற்கும் பொருள்சார் வாழ்க்கைக்கும் இடையில் எந்தப் பிளவும் இல்லை. இஸ்லாம் இணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துகிறது; அதேவேளை, மதச்சார்பின்மை பிளவுகளின் மீது செழிக்கிறது.

மதச்சார்பின்மை சுதந்திரத்தை முன்னிறுத்துகிறது. ஆனால், அந்தச் சுதந்திரம் எதற்காக என்பதற்கு அதனால் பதிலளிக்க முடியவில்லை. நுகர்வதற்குச் சுதந்திரமுள்ளவர்களாக இருந்தும், வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டறிவதற்கான சுதந்திரத்தைப் பெறாத தனிநபர்களை அது உருவாக்குகிறது.

மறுபுறம், இஸ்லாம் மனித கண்ணியத்தை மனிதனின் தன்னாட்சியில் அடிப்படையாகக் கொள்ளாமல், அளவற்ற கருணையுடைய இறைவனுக்குச் சேவை செய்வதிலும் அவனுக்குக் கீழ்ப்படிவதிலும் அடிப்படையாகக் கொள்கிறது. இறைவனுக்குக் கீழ்ப்படிவதில்தான் மனிதன் உண்மையான விடுதலையைக் காண்கிறான்.

மாறிக்கொண்டிருக்கும் சமூக ஒப்பந்தங்களையும் பெரும்பான்மையினரின் ஒருமித்த கருத்தையும் அடிப்படையாகக் கொண்டு மதச்சார்பின்மை அறநெறியை உருவாக்குகிறது. ஆனால், இஸ்லாம் தனது அறநெறியை இறை வெளிப்பாட்டில் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இஸ்லாமிய அறநெறி வாக்கெடுப்புகளுக்கும் கருத்துக் கணிப்புகளுக்கும் மக்கள் கலாசாரத்திற்கும் உட்பட்டதல்ல. அது காலத்தைக் கடந்ததும், புறவயமானதும் ஆகும்.

இஸ்லாம் மற்றவர்களை வெறுமனே சகித்துக்கொள்வதோடு நின்றுவிடுவதில்லை; அவர்களுக்கும் நீதியை வழங்குகிறது. முஸ்லிம்களுக்குப் பின்வருமாறு கற்பிக்கப் படுகிறது:

“மார்க்கத்தின் காரணமாக உங்களுடன் போரிடாதவர்களுக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களிடம் நீதியாக நடந்துகொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை.” (அல்குர்ஆன் 60:8)

ஆனால், நீதி தமக்கே எதிராக இருந்தாலும், அதில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும் என்றும் இஸ்லாம் இறைநம்பிக்கையாளர்களிடம் கோருகிறது:

“நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களுக்கோ, உங்கள் பெற்றோருக்கோ அல்லது உங்கள் உறவினர்களுக்கோ எதிராக இருந்தாலும், அல்லாஹ்வுக்காக நீதியை நிலை நாட்டுபவர்களாகவும், நீதிக்குச் சாட்சியமளிப்பவர்களாகவும் உறுதியாக நில்லுங்கள்.” (அல்குர்ஆன் 4:135)

எந்த மதச்சார்பற்ற அரசியலமைப்பும் இத்தகைய சுயவிமர்சன நேர்மையை வழங்குவதில்லை.

முடிவுரை

மாயைகளின் காலம் முடிவுக்கு வந்துவிட்டது. மேற்குலகம் இனியும் இஸ்லாத்தைச் சகித்துக்கொள்வதாகக் காட்டிக்கொள்வதில்லை; அது இஸ்லாத்தைக் கண்டு அஞ்சுகிறது. இஸ்லாம் வன்முறையானது என்பதற்காகவோ, பிற்போக்கானது என்பதற்காகவோ அல்ல; மாறாக, அது முழுமையானது என்பதற்காகவே.

அது முழுமையான உலகக் கண்ணோட்டத்தையும், நீதியான சட்ட ஒழுங்கையும், மனிதனால் உருவாக்கப்பட்ட சித்தாந்தங்களின் மேலாதிக் கத்திற்குச் சவால் விடுக்கும் அறநெறித் திசைகாட்டியையும் வழங்குகிறது. இஸ்லாம் பகுத்தறிவுடன் போரிடுவதில்லை; மாறாக, பகுத்தறிவின் மீது மதச்சார்பின்மை கொண்டுள்ள ஏகபோக உரிமைக்குச் சவால் விடுக்கிறது.

முஸ்லிம்கள் மதச்சார்பற்ற சகிப்புத்தன்மையின் வெற்று வாக்குறுதிகளால் கவரப்படக்கூடாது. அதேபோல், தங்களது மார்க்கத்தை வெறும் அடையாள அரசியலாகவும் சுருக்கிவிடக்கூடாது. இஸ்லாம் தாராளவாதத்தின் வீட்டில் விருந்தினராக இருப்பதில்லை. மாறாக, இறைவன் அரசைவிட உயர்ந்த அதிகாரத்துடன் ஆட்சி செய்யும், மிகவும் நீதியான, அறநெறி மிக்க, அர்த்தமுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான அடிப்படைத் திட்டமாக அது விளங்குகிறது.

மதச்சார்பின்மை தன்னைத்தானே இறைவனாக முடிசூட்டிக்கொண்டுள்ள இந்தக் காலத்தில், இஸ்லாம் மட்டுமே உண்மையின் அடிப்படையில் எழும் இறுதிப் புரட்சியாகத் தொடர்ந்து நிலைத்திருக்கிறது.

-சலீம் மொஹமட் பதாத்

No comments:

Post a Comment