Tuesday, January 10, 2012

'ஈரான் மாத்திரமே நேர்மை ஒழுங்கை கடை பிடிக்கும் தேசம்'

'ஈரான் மாத்திரமே நேர்மை ஒழுங்கை கடை பிடிக்கும் தேசம்'
ஈரான் ஐனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத் சூளுரை.

நேர்மை ஒழுங்கை கடை பிடிக்க ஒன்று திரளுமாறு உலக சமாதான விரும்பிகளுக்கு ஈரான் தலைவர் அழைப்பு விடுத்தார். ஐநா சபையின் கட்டமைப்பில் ஏற்பட வேண்டிய மாற்றம் அதன் முதலாவது நடவடிக்கை என்றும் அவர் வலியுறுத்தினார்.

'இம்மாற்றம் அத்தியாவசியமாக இருப்பதால் அது நடைபெற்றே தீரும் என நாம் நம்புகின்றோம்' என்று சமீபத்தில் கடாரில் நடைப்பெற்ற வெளிநாட்டு தூதுவர்களின் சந்திப்பின்போது அஹ்மதி நெஜாத் குறிப்பட்டதாக ஈரானிய செய்தி ஸ்தாபனமான irna தெரிவித்தது.

முதலாவது மற்றும் இரண்டாவது உலகப்போர்களின் விளைவாக உருவான தற்போதைய உலக நடைமுறை ஒரு தலைப்பட்சமான ஒன்றாவதால் அது சுயநலப்போக்கையே கொண்டுள்ளது. கடந்த 60 வருட காலத்தில் உலகிற்கு நீண்டு நிலைத்திருக்கக் கூடிய சமாதானத்தையோ மனித சமூகத்திற்கு பாதுகாப்பையோ அதனால் உறுதி படுத்த முடியாமல் போயுள்ளது. அத்தோடு இஸ்ரேல், பலஸ்தீனப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கோ ஆப்கானிலும் ஈராக்கிலும் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளை முடிவுக்கக் கொண்டு வருவதற்கோ அதனால் முடியாமல் போயுள்ளது' என்றும் நெஜாத் சுட்டிக்காட்டினார்.

சூறையாடல், கொள்ளை படுகொலைகளை நிறுத்தும், மனித சமூகத்திற்கு உண்மையான முன்னேற்றத்தை கொண்டு வரும் ஒரு புதிய உலக ஒழுங்கை நிறுவுவதன் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தினார். தொடர்ந்து கருத்தத் தெரிவித்த ஈரானியத் தலைவர், பிராந்தியத்தில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் எதிரிகளின் சதித்திட்டங்கள் விடயத்தில் முஸ்லிம் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் எச்சரித்தார்.

பிராந்தியத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இணைப்பு வழியான பாரசீக வளைகுடாப் பகுதியை ஆளுகை புரிவதற்கு எதிரிகள் கடந்த பல தசாப்தங்களாக பலத்த முயற்சி செய்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிராந்தியத்தில் தாங்கள் நிலைத்திருப்பதற்கு ஒரு காரணத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இப்பிரதேச நாடுகளுக்கு தமது ஆயுதங்களை விற்பதற்கான பதட்ட மனநிலையை உருவாக்கும் குயுக்தியில் மேற்குலக உளவியல் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் ஈரானிய ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இருந்த போதிலும், பிராந்திய நாடுகள் விழிப்புடன் இருந்து வருவதால் எதிரிகளின் சூழ்ச்சிகள் தொடர்ந்து பயனற்றுப் போயுள்ளதாகவும் நெஜாத் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதே வேளை அதே தினத்தில் கடாரில் வாழும் ஈரானியர்களுடன் நடைபெற்ற மற்றொரு சந்திப்பில் 'மக்களின் சொத்துக்களை சூறையாடி படுகொலைகளை செய்வதன் ஊடாக முதலாளித்து நாடுகளுக்கு வால் பிடிப்பைதயே இன்றைய உலக ஒழுங்கு நோக்கமாக கொண்டுள்ளது' என்றும் நெஜாத் சாடினார்.

'இன்று உலகில் நேர்மையான ஒழுங்கு முறை ஒன்றை ஸ்தாபிக்கும் ஆற்றள் உள்ள ஒரே நாடு ஈரான் மட்டுமே' என்றும் ஈரானியத் தலைவர் கூறினார். மேலும் கருத்துத் தெரிவித்த அவர் பிராந்தியத்தில் ஈரானை தனிமைப்படுத்துவதற்கு எதிரிகள் மேற்கொண்ட சதி முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

'எதிரிகள் எம்மை பற்றி அதிகம் பேசும் போதே நாம் ஒரு பலமிக்க நாடாக உலகில் உருவாகயுள்ளோம் என்பது ஊர்ஜிதமாகின்றது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

சூழ்ச்சிகளை அழிப்பதற்கும் பிராந்தியத்தல் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஈரானுக்கும் கடாருக்குமிடையில் பொதுத்திட்டங்கள் பல உள்ளதாகவும் நெஜாத் கூறினார்.

No comments:

Post a Comment