Wednesday, January 23, 2019

குழந்தைகள் அவசியம் பார்க்க வேண்டிய ஈரானிய திரைப்படங்கள்!


logo



Children'sDay 


திரைப்பட வகைகளில், குழந்தைகளுக்கான திரைப்படங்களுக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உள்ளது. இவை குழந்தைகளுக்கான படங்களாக மட்டும் இல்லாமல், எல்லோருக்குமான திரைப்படங்களாகவே இருந்திருக்கின்றன. ஒரு பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படத்தைக் காட்டிலும், மிக சிறந்த அறிவியல் புனைவு (science fiction), மற்றும் வேறு வகை திரைப்படங்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் அனைத்து வயதினரையும் தொட்டு, மொழிகளைக் கடந்து, மதங்களைக் கடந்து அன்பையும், ஆனந்தத்தையும் பரவச்செய்து, பார்வையளனின் மனதில் குழந்தைப் பருவ கண்ணோட்டத்தையும் விதைத்து விடுகிறது. உங்கள் வீட்டுக் குழந்தைகள் அவசியம் பார்க்க வேண்டிய 10 திரைப்படங்கள் இதோ:

வேர் ஸ் த பிரண்ட்ஸ் ஹோம்  
(Where Is the Friend's Home?)
அப்பாஸ் கியரஸ்தமி எனும் உலகப் புகழ்பெற்ற இயக்குனரின் கலை படைப்பில் உருவான குழந்தைகளுக்கான திரைப்படம்தான் வேர் இஸ் த பிரண்ட்ஸ் ஹோம். உற்சாகமும் மனிதநேயமுள்ள குழந்தைகளின் உலகை இந்தத் திரைப்படம் பிரிதிபலிப்பதாய் அமைந்துள்ளது. தன் சக பள்ளி தோழனின் வீட்டு பாட ஏட்டினைக் கொடுக்க பக்கத்து மலைக்கிராமத்துக்கு பயணிக்கும் சிறுவன் அஹ்மத் மற்றும் அவனின் நண்பன் ரிடா நமட்ஸதேவை கதையின் மையமாய் வைத்து காட்சி படைப்பில் எதார்த்த பாணியில் எடுக்கப்பட்டது இத்திரைப்படம். தன் நண்பனின் வீட்டை தேடி பல மலைக்கிராமமாக அலைந்தும் அதை கண்டுப்பிடிக்க முடியாத அஹ்மத், தானே தன் நண்பனுக்கான வீட்டு பாடத்தை எழுதி ஆசிரியரிடம் தன் நண்பனுக்கு நல்ல பெயர் வாங்கி தரும் அஹமத், குழந்தைகளின் நட்பு மற்றும் மனிதாபிமானதை பறைசாற்றும் படமாக உள்ளது.
தி ஒயிட் பலூன் (THE WHITE BALLOON)
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு, ஈரான் தயாராகி வரும் வேளையில், கடைத்தெருவிற்கு தன் அம்மாவுடன் செல்லும் ஏழு வயது ரசியா, கடையில் விற்கப்படும் தங்கமீனை வாங்கித் தரும்படி தன் அம்மாவிடம் கேட்கிறாள். பணம் காரணமாக முதலில் அதை மறுக்கும் அம்மாவை, தன் அண்ணன் அலி மூலமாக, அம்மாவிடம் பணம் பெற்று, தன் ஆசையை நிறைவேற்ற கடைத்தெருவுக்கு ஓடும் ரசியா, போகும் வழியில் பணத்தைத் தொலைக்கிறாள், பூட்டிய கடை வாசலில் சிக்கிக் கொள்கிறது பணம்! அதை எடுக்கப் போராடும் ரசியாவுக்கு, அண்ணன் அலி உதவ வருகிறான். பணதை மீட்கப் போராடும் குழந்தைகளுக்கு, ஒற்றை வெள்ளை பலூனோடு இருக்கும் குச்சியின் துணை கொண்டு, அப்பணத்தை மீட்க உதவி செய்வான், பலூன் விற்கும் சிறுவன் ஒருவன்! குழந்தைகள் அன்பை பரிமாற்றத்தை அழகாக காட்டும் திரைப்படம்.
கலர் ஆஃப் பாரடைஸ்' (Color of Paradise)
கலர் ஆஃப் பாரடைஸ் எனும் ஈரானிய திரைப்படத்தை மஜித் மஜிதி இயக்கியிருந்தார். தன் தாயையும், கண்பார்வையும் இழந்த மொஹமத் எனும் சிறுவன் டெஹ்ரானில் உள்ள ஒரு சிறப்புப் பள்ளியில் படித்துக்கொண்டிருகிறான். விடுமுறையில் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே வந்து தன் தந்தை வருகைக்காக ஒரு தோட்டத்தில் அவன் காத்திருக்கும்போது  ஒரு சிட்டுக்குருவியின் குஞ்சு கூட்டிலிருந்து கீழே விழுந்துவிடுகிறது. இதை ஓசையால் அறிந்த மொஹமத்  மெல்லமெல்ல தட்டுத்தடுமாறி சென்று அந்த குருவிக்குஞ்சை தனது சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டு மரத்தில் ஏறி குருவிக்குஞ்சை எடுத்து குருவிக்கூட்டில் வைக்கும்போது அவனது விரல்களை குருவி கவ்வுவதை ரசிக்கும் கண்பார்வையற்ற மொஹமதை பார்க்கும் அனைவருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் அன்பு உள்ளம் புரிய வரும். கண்பார்வை இல்லாததால் தன் தந்தையால் நேசிக்கப்படாத ஒரு குழந்தையைப் பற்றியது இந்தத் திரைப்படம்.
சில்ரன் ஆப் ஹெவன் (Children of Heaven)
சொர்க்கத்தின் குழந்தைகள் 1997 ஆம் ஆண்டு ஈரான் நாட்டிலிருந்து பாரசீக மொழியில் வெளிவந்த திரைப்படம் ஆகும். சிறந்த பிற மொழித் திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இப்படத்தினை மஜித் மஜிதி எழுதி இயக்கியிருந்தார்.
தன் தங்கை சாராவின் காலணிகளைத் தவறவிட்டுவிடும் அலி என்ற சிறுவன், வீடு வந்ததும், செருப்பைக் கேட்கும் தன் தங்கையிடம் அழுதுகொண்டே விவரத்தைக் கூறுகிறான். பெற்றோரின் ஏழ்மையைப் புரிந்துகொள்ளும் சாரா, அலியிடம் உள்ள காலணிகளையே தான் பள்ளிக்குச் செல்லும்போது பயன்படுத்துகிறாள், இதனால் தினமும் பள்ளிக்கு தாமதமாய் செல்கின்றான் அலி, இதற்கிடையில் தொலைந்த தன் காலணிகளை வைத்திற்க்கும் ஒரு சிறுமியை பின்தொடர்ந்து செல்லும் சாராவும், அலியும், தங்களை விட வறுமையில் வாடும் கண்பார்வை இல்லாத  அந்த சிறுமியின் தந்தையை கண்டதும், இரக்கம் கொண்டு தாங்கள் தேடி வந்த காலனிகளைக் கண்டுபிடித்தும், அதை திருப்பித்தர கேட்காமல் அமைதியாய் திரும்பும் காட்சிகளில் இக்குழந்தைகள் சொர்கத்தின் குழந்தைகளாய் தோன்றுவார்கள். இறுதி காட்சிகளில் காலணிகளுக்காக போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அலியின் ஓடிப் படிந்த ரணங்களை எல்லாம் வருடி முத்தம் தர வரும் மீன்களை கொண்டு காட்சியில் கவிதை படைத்திருப்பார் இயக்குநர்.
ஹயாத் (Hayat)
மாட்ரிட் குழந்தைகள் திரைப்பட விழா, இசுத்தான்புல் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா, அர்ஜெண்டினா குழந்தைகள் திரைப்பட விழா, உருகுவே குழந்தைகள் திரைப்பட விழா,
பெலாரஸ் குழந்தைகள் மற்றும் சர்வதேச திரைப்பட விழா மற்றும் பல திரைப்பட விழாக்களில் விருதுகள்பெற்ற ஹையாத் (Hayat ) எனும் பாரசீக மொழித் திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியானது. இந்தத் திரைப்படத்தினை ஈரானிய இயக்குனர் கோலாம் ரேஸா ரமீஸானி (Gholam Reza Ramezani) இயக்கியுள்ளார். ஹயாத், 12 வயது சிறுமி. ஈரானின் கிராமம் ஒன்றில் வசிக்கிறார். மிகக் கடினமாக பள்ளித் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறாள். தேர்வுக்கு முதல் நாள் இரவில் அவளது தந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். வீட்டில் இருக்கும் கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ஹையாத்துக்கு. ஆனால் ஹையாத் தேர்வு எழுதவே விரும்புகிறார். மிகக் கடின போராட்டத்திற்குப் பிறகு சற்று தாமதமாக தேர்வு எழுதச் செல்கிறார் ஹையாத். ஹையாத் எனும் பாரசீகச் சொல்லுக்கு வாழ்க்கை என்று பொருள்.
குழந்தைகள் தினத்தில் சிறந்த பரிசாக இந்தப் படங்களின் குறுந்தகடுகளை உங்கள் குழந்தைகளுக்கு வாங்கித் தரலாம். குழந்தைகள் மட்டுமல்ல... அவர்களை நேசிக்கும் பெற்றோர்களும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படங்கள் இவை.
-  கே.சிவக்குமார்

No comments:

Post a Comment