புனித ரமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை வருடாந்தம் குத்ஸ் தினம் அல்லது சர்வதேச குத்ஸ் தினம் என அழைக்கப் படுகின்றது. இதன்படி இவ்வாண்டு இந்தத் தினம் ஓகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.
இஸ்ரேலிய சியோனிஸ வாதிகளின் இரும்புப் பிடியில் சிக்கித் தவிக்கும் பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக அவர்களுடனான உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காகவே இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்த எண்ணக்கருவை உலகுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்தவர் ஈரான் இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் மறைந்த இமாம் கொமெய்னி ஆவார். இஸ்லாமியப் புரட்சியின் தொடராக 1979 ஆகஸ்டில் அவர் இந்தப் பிரகடனத்தைச் செய்தார். அன்று முதல் ஈரான் இஸ்லாமியக் குடியரசில் இது அரச ஆதரவுடன் கூடிய மாபெரும் மக்கள் பேரணிகளுடன் கூடிய ஒரு வருடாந்த நிகழ்வாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
காலப்போக்கில் முழு முஸ்லிம் உலகமும் இந்த எண்ணக்கருவை ஏற்றுக்கொண்டன. இன்று முழு முஸ்லிம் மற்றும் அரபு உலகிலும் இன்றைய தினம் சர்வதேச குத்ஸ் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
முஸ்லிம்களின் முதலாவது கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள ஜெரூஸலம் இன்று இஸ்ரேலிய ஆதிக்க வெறியர்களின் கரங்களில் சிக்குண்டுள்ளது. இதை விடுவிப்பதற்காக உலக முஸ்லிம்கள் அனைவரும் தமது சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இன்றைய தினங்களில் ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்தி இஸ்ரேலுக்கு எதிரான தமது குரலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இன்றைய தினத்தின் பிரதான குறிக்கோள் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பதும், அவர்களுடனான சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவதுமாகும். ஜெரூஸலத்தை விடுவிப்பதற்காகப் பாடுபட வேண்டியது உலக முஸ்லிம்கள் அனைவரினதும் கடமையாகும் என்று சர்வதேச குத்ஸ் தின பிரகடனத்தில் இமாம் கொமெய்னி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
பலஸ்தீன மக்களின் சட்டபூர்வமான உரிமைகளை நிலைநாட்ட உலக முஸ்லிம்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என அவர் அன்றே அழைப்பு விடுத்தார். 1979 இல் விடுக்கப்பட்ட இந்த அழைப்பு இன்று உலக முஸ்லிம்களின் செவிகளை மொத்தமாகச் சென்றடைந்துள்ளது. இன்று உலக முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் விழிப்புணர்வு கூட இந்த அழைப்பின் தாக்கத்தால் விளைந்தது என்று கூறினால் அது மிகையாகாது.
பல ஆண்டுகளாக அப்பாவி பலஸ்தீன மக்கள் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களுக்கும், ஆபத்துக்களுக்கும் முகம் கொடுத்தவர்களாகக் காணப்படுகின்றனர். தென் லெபனான், காஸா ஆகிய பகுதிகளில் உள்ள அப்பாவி மக்கள் அன்றாடம் சொல்லொணா துன்புறுத்தல்களுக்கும் முகம் கொடுத்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
பால், வயது வித்தியாசங்கள் எதுவுமின்றி இந்தக் கொடுமைகள் இன்றும் தொடருகின்றன. இன்று இஸ்ரேலியப் படைகள் பொழுது போக்காக குண்டு வீசி விளையாடும் மைதானமாக பலஸ்தீன் பிரதேசங்கள் மாறிவிட்டன.
இஸ்ரேலின் போஷகரான அமெரிக்காவில் தயாரிக்கப்படும் நாசகார ஆயுதங்களின் பரீட்சார்த்த பூமியாகவும் பலஸ்தீனம் மாறிவிட்டது. எனவே இந்தக் கொடிய சக்திகளின் கரங்களைத் துண்டிப்பதற்காக, உலக முஸ்லிம் அரசுகள் ஓரணியில் திரள வேண்டிய காலம் வந்துவிட்டது.
சர்வதேச குத்ஸ் தினமாக புனித ரமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை தெரிவு செய்ய இதுவும் ஒரு காரணமாகும். ரமழான் திட சங்கற்பத்திற்கான ஒரு மாதம், பலஸ்தீன மக்களின் தலைவிதி குறித்து உலக முஸ்லிம் சமூகம் திடசங்கற்பம் பூணவேண்டிய ஒரு காலம் இதுவாகும்.
உலகம் முழுவதும் பலஸ்தீன மக்களுடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி கூட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்துவதன் மூலம் அந்த மக்களுக்கான தார்மீக உரிமைகளுக்கான ஆதரவை உலக முஸ்லிம்கள் வெளிப்படுத்த முடியும். மேலும் அடக்குமுறையாளர்களுக்கு எதிரான அப்பாவி பலஸ்தீனர்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டியதும் உலக முஸ்லிம்களின் கடமையாகும்.
இன்று குத்ஸ் தினம் ஒரு சர்வதேச தினமாகும். ஆனால் இது பலஸ்தீன விடுதலைக்கு அல்லது மஸ்ஜிதுல் அக்ஸாவின் விடுதலைக்கு மட்டும் ஆதரவு தெரிவிக்கும் ஒரு தினம் அல்ல. இது அநியாயக்கார ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிராகப் போராடும் அடக்கி ஒடுக்கப்பட்ட பலவீனப்படுத்தப்பட்ட எல்லா மக்களுக்கும் ஆதரவு தெரிவிக்கும் ஒரு தினமாகும். குறிப்பாக அமெரிக்காவினதும் ஏனைய மேலைத்தேய சக்திகளினதும் நெருக்குதலில் சிக்கித் தவிக்கும் நிர்க்கதியான மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரு தினமாகும்.
சர்வதேச குத்ஸ் தினம் என்பது ஒடுக்கப்பட்ட தேசங்களில் வாழும் அப்பாவி மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு தினமாகும். அடக்கி ஒடுக்கப்பட்ட நாடுகள் அடக்குமுறையாளர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பி தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக குரல் கொடுக்கும் ஒரு நாளாகும்.
இந்த வகையில் அந்த மக்கள் ஈரான் இஸ்லாமியக் குடியரசை ஒரு உதாரணமாகக் கொள்ள வேண்டும். ஆதிக்க வெறியர்களையும் அடக்கு முறையாளர்களையும் குப்புறத் தள்ளி அவர்களின் முதுகின் மேல் ஏறி நின்று வெற்றிக் கொடி நாட்டிய ஒரு தேசம் ஈரானாகும். தொடர்ந்தும் ஈரான் இந்த வெற்றியைத் தனதாக்கி வருகின்றமை இன்றும் கண்கூடாகக் காணக்கூடிய ஒன்றாகும். ஈரானைப் போல் எல்லா முஸ்லிம் நாடுகளும் ஒன்றிணைந்து உலகை ஆட்டிப் படைக்கும் இந்த விஷ ஜந்துக்களை அழித்தொழிக்க சபதம் செய்ய வேண்டிய நாள் இன்றாகும்.
அடக்கி ஆளப்படும் அப்பாவி மக்களை அவர்கள் பாட்டில் தமது சொந்த நாடுகளில் நிம்மதியாக வாழ விட்டுவிட்டு இந்த ஆதிக்கச் சக்திகள் தமது சொந்த நாடுகளை நோக்கி மூட்டை கட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை அவர்களுக்கு உணர்த்துவதற்காக உலக முஸ்லிம்கள் தமது குரல்களை ஓங்கி ஒலிக்கச்செய்ய வேண்டிய தினம் இன்றாகும்.
இஸ்ரேல் என்பது மனித குலத்தின் எதிரி, மனிதப் பண்புகளின் எதிரி. இந்த எதிரி தான் பலஸ்தீனத்திலும், தென் லெபனானிலும் அப்பாவிப் பொது மக்களுக்கு எதிராக அன்றாடம் குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றது. அந்த மக்களின் நிம்மதியையும், சமாதானத்தையும் குழப்பி வருகின்றது. இந்த இஸ்ரேலிய விஷமிகளின் எஜமானர்களை இனிமேலும் உலகம் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்பதை இஸ்ரேல் புரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இஸ்ரேலும் அதன் எஜமானர்களும் தோற்கடிக்கப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இவர்கள் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் இருந்து இவர்களின் கரங்கள் துண்டிக்கப்படும் நாள் நெருங்கிவிட்டது. இஸ்லாமிய நாடுகளில் இருந்து இஸ்ரேல் அதன் எஜமான்கள், மற்றும் ஏஜன்டுகள் விலகிச் செல்ல வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்பதை உணர்த்துவதற்கான ஒரு நாளே இன்றைய சர்வதேச குத்ஸ் தினமாகும்.
இத்தகைய உண்மைகளை இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தீயசக்திகளுக்கு உணரச் செய்யும் ஒரு உன்னதமான நாளே இன்றைய நாளாகும். இந்த அறிவிப்பை உலகம் முழுவதும் விடுப்பதற்காகவே இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக தீய சக்திகள் காணும் கனவு வெறும் கனவுதான்.
அது ஒருபோதும் நனவாகப் போவதில்லை என்ற நம்பிக்கையை உலக முஸ்லிம்களின் உள்ளங்களில் விதைக்கச் செய்யும் நாளே இன்றைய நாளாகும். முஸ்லிம் நாடுகள் வெகு விரைவில் தமக்கே உரிய பிரத்தியேகமான சட்ட திட்டங்களுடன், கலாசார பாரம்பரியங்களுடன் தமது விடயங்களை தாமே நிர்வகித்துக் கொள்ளும் காலம் வெகு விரைவில் மலரப் போகின்றது என்ற நம்பிக்கையை அந்த நாட்டு மக்களுக்கு வலுவாக ஊட்டும் நாளே இன்றைய நாளாகும்.
சர்வதேச குத்ஸ் தினம் இஸ்லாத்தின் தினமாகும். அது இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கான தினமாகும். எனவே இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காகவும், இஸ்லாமிய நாடுகளில் இருந்து ஆதிக்க வல்லரசுகளை விரட்டியடித்து மீண்டும் அங்கு மக்களாட்சி மலர இன்றைய தினத்தில் பிரார்த்திப்போமாக.
இன்றைய தினம் எல்லா வல்லரசுகளுக்குமான ஒரு எச்சரிக்கை தினமாகும். இஸ்லாமிய நாடுகளையோ, அவற்றின் மக்களையோ இனிமேலும் இந்த ஆதிக்க சக்திகளின் அல்லது அவர்களின் கூட்டாளிகளின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது என்ற எச்சரிக்கையை அவர்களுக்கு விடுக்கும் தினமே இன்றைய தினமாகும்.
குத்ஸ் தினம் முஸ்லிம்களின் விழிப்புணர்வுக்கான தினமாகும். முஸ்லிம்கள் தமக்குள்ளே பொதிந்து கிடக்கும் ஆத்மீக மற்றும் லெளகிக பலங்களை உணர்ந்து கொள்வதற்கான ஒரு தினமாகும்.
நூறு கோடிக்கும் அதிகமான ஒருமக்கள் தொகை, அந்த மக்களுக்கே உரித்தான இஸ்லாம் என்ற தனித்துவமான தெய்வீக வழிகாட்டலும், இறை ஆதரவும், கொண்ட ஒரு பலம் பொருந்திய சமுதாயமாக அவர்கள் இருக்கையில் எதற்காக இந்த போலிச் சக்திகளையும் ஆரவாரங்களையும் கண்டு உலக முஸ்லிம்கள் அஞ்ச வேண்டும்? இஸ்லாம் தோற்கடிக்க முடியாத ஒரு சக்தி என்பதை இந்த ஆதிக்க வெறியர்களுக்கு முஸ்லிம்கள் உணர்த்த வேண்டும்.
இஸ்லாமும் அதன் போதனைகளும் உலக முஸ்லிம் நாடுகளில் நீடித்து நிலைக்க வேண்டும். அதற்காக இன்றைய தினத்தைப் பயன்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment