Monday, January 21, 2019

தி சேல்ஸ்மேன், ஈரான் திரைப்படத்திக்கு ஆஸ்கார் விருது

The Salesman
இயக்குனர் Asghar Farhadi யின் «The Salesman» திரைப்படத்தை அண்மையில் பார்க்கக் கிடைத்தது.  2011 இல் இவருடைய «The Seperation»  திரைப்படம் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றது. விவாகரத்தை பற்றி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் யதார்த்த காட்சியமைப்பும், உரையாடல்களும், விறுவிறுப்பான கதை நகர்வும் Asghar Farhadi மீது ஈர்ப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருந்தது. The Salesman திரைப்படமும் அந்த நம்பிக்கையை அப்படியே காப்பாற்றியிருக்கிறது. 

 ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை நோக்கி இடம்பெயரும் ஒரு இளம் தம்பதியினரின் (Shahab Hosseini & Tarneh Alidusti)  மகிழ்ச்சியான வாழ்க்கை எப்படி அதே குடியிருப்பில் இவர்களுக்கு முன்னர் அங்கு வசித்த ஒருவரால் தடம்புரள்கிறது என்பதே திரைக்கதை.  மேடை நாடக கலைஞர்களான இத்தம்பதியினர், இயல்பு வாழ்க்கையில் நடந்தேறும் சம்பவங்களுக்கான வேதனையை நாடக மேடையில் பிரதிபலிக்கும் காட்சி அமைப்பு அற்புதம். 
வீட்டில் தான் இல்லாத போது குளியலறை வரை வந்து தனது மனைவியை பலாத்காரப்படுத்தி அச்சுறுத்திச் சென்ற முகம் தெரியாதவனை தேடித் திரியும் அக்கணவனின் கோபத்திலேயே பாதித் திரைப்படம் சென்றுவிடுவதும், அதற்காக இவர்களையெல்லாமா சந்தேகப்படுவது என அக்கணவன் மீது பார்வையாளனாக எமக்கு கோபம் வரவைப்பதில் மீதித் திரைப்படத்தையும் கச்சிதமாக நகர்த்தியிருக்கிறார் ஆஷ்கார் ஃபர்ஹாடி. 
ஒரு கட்டத்தில் அக்கணவன் மீது அவனது மனைவி, அயலவர்கள், ஏன் பார்வையாளர்களாகிய நாம் என அனைவரின் வெறுப்பும் ஒட்டுமொத்தமாக குவியும் போது, எம் அனைவரையும் முட்டாளாக்கி அக்கணவனின் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்கிறது திரைக்கதை முடிவு. 
மாடிக் குடியிருப்பில் ஒரு வீடு, ஒரு நாடக மேடை, இன்னுமொரு வெற்று வீடு இவை மூன்றிலுமே பெரும்பாலான கதை நகர்கிறது. அதிலும் அத்திரைப்படத்தின் கதாபாத்திரங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.  ஆனால் அவர்கள் ஒவ்வொருவரினதும் நடிப்பு, அக்கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். 
ஒரு மாதத்திற்குள் அனைத்து படப்பிடிப்பையும் முடித்துவிட்டிருப்பார்கள் என நம்பக் கூடிய அளவு அவ்வளவு எளிதான கதைக் களம். ஆனால் கதை தான் ஹீரோ, கதை தான் வில்லன்.  ஈரானிய சினிமா இன்னமும் யதார்த்த சினிமா உலகில்  நன்றாகவே ஜொலித்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு The Salesman இன்னுமொரு நல்ல உதாரணம்.

No comments:

Post a Comment