இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் 1982 முதல் 2000 வரை பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் ஷியா முஸ்லிம்கள்தான். லெபனானின் மக்கள் தொகையில் 40 விழுக்காடாக இருக்கும் இவர்களில் பெரும்பான்மையினர் ஏழைகள்; பெய்ரூட் நகரின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளிலும் தென் லெபனான் கிராமங்களிலும் வாழ்கிறவர்கள். அதாவது, இந்த ஆக்கிரமிப்புப் போர் ஏற்படுத்தும் அழிவுகளை நேரடியாக முதலில் சந்திக்கிறவர்கள் இவர்கள்தான். தங்களுடைய அரசியல், பொருளாதார உரிமைகளை மீட்டுத் தருவதிலோ, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை முறியடிப்பதிலோ இடதுசாரி, சமயச் சார்பற்ற அரசியல்வாதிகள் தோல்வியடைந்துவிட்டனர். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்காக 1982 இல் பல்வேறு ஷியா முஸ்லிம் குடிப் படைகள் (Militias) தோன்றின. இவை 1979 இல் ஈரானில் ஆட்சிக்கு வந்த இஸ்லாமியப் புரட்சி அரசாங்கத்திடமிருந்து நிதி உதவியையும் ராணுவப் பயிற்சியையும் பெற்றன. இவற்றில் பெரும்பாலானவை ஒன்றிணைந்து ‘ஹிஸ்பொல்லா' (அல்லாவின் படை) என்னும் அமைப்பை உருவாக்கின. லெபனானில் அமைதியைப் பாதுகாத்தல் என்னும் பெயரால் வந்திருந்த அமெரிக்கப் படைகளையும், இஸ்ரேலியக் கூலிப்படைகளையும் நாட்டை விட்டு வெளியேற வைத்தவை ஹிஸ்பொல்லாவின் கெரில்லா நடவடிக்கைகள்தாம்.

Israel attack
ஹிஸ்பொல்லா, கெரில்லாத் தாக்குதல்களை நடத்தும் வெறும் ஆயுதமேந்திய குழு மட்டுமல்ல; அது ஓர் அரசியல் கட்சியுமாகும். லெபனான் அரசாங்கத்தால் ஷியா முஸ்லிம்களுக்கோ, பிற சமூகப் பிரிவினருக்கோ வழங்க முடியாத அல்லது அரைகுறையாக மட்டுமே வழங்க முடிகின்ற கல்வி, மருத்துவம், போக்குவரத்து, வேலைவாய்ப்பு போன்ற சேவைகளை வழங்குவதற்காக பள்ளிக்கூடங்கள், மருத்துவ நிலையங்கள் முதலியவற்றை நடத்துகிறது. பேக்கரிகள், தொழிற்சாலைகள், வங்கிகள், இஸ்லாமிய ஆடைத் தயாரிப்புக்கூடங்கள், செயற்கைக்கோள் துணைகொண்டு இயங்கும் ஒரு தொலைக்காட்சி நிலையம், ஒரு வானொலி நிலையம் ஆகியவற்றையும் அது நடத்துகிறது.

1990களின் தொடக்கத்திலிருந்தே லெபனான் நாட்டு அரசியலில் நேரடியாக ஈடுபடத் தொடங்கிய ஹிஸ்பொல்லா, 1992 இல் முதன்முதலாக நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்று சில இடங்களைக் கைப்பற்றியது. தனது தலைமையில் அது உருவாக்கியுள்ள நாடாளுமன்றக் கூட்டணியில் சுன்னி முஸ்லிம்கள், மரோனைட் கிறித்துவர்கள், மதச்சார்பற்ற சக்திகள் ஆகியோரையும் உள்ளடக்கியுள்ளது. 2005 ஆம் ஆண்டு நடந்த 128 உறுப்பினர்களுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் ஹிஸ்பொல்லா எட்டு இடங்களையும் கூட்டணிக் கட்சிகள் நான்கு இடங்களையும் கைப்பற்றின.

இன்றைய லெபனான் அரசாங்கத்தில் இரண்டு ஹிஸ்பொல்லா அமைச்சர்கள் உள்ளனர். எனினும் அது (அய்.நா. தீர்மானமொன்றிற்கிணங்க) தனது ஆயுதப் படைகளைக் கலைக்க இதுவரை மறுத்து வருகிறது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை முறியடிப்பதற்கு அது கடந்த சூலை ஆகஸ்ட் மாதங்களில் மேற்கொண்ட ராணுவ, அரசியல் நடவடிக்கைகளில் லெபனியக் கம்யூனிஸ்ட் கட்சியும் மக்கள் கட்சி என்னும் தேசியவாதக் கட்சியும் முழுமையாகப் பங்கேற்றன. இவை மூன்றுக்குமிடையே ஒரு பரந்த அரசியல் கூட்டணியும் உருவாகியுள்ளது. ஹிஸ்பொல்லா ஓர் உறுதியான தேசிய விடுதலை இயக்கம் எனப் பாராட்டும் கம்யூனிஸ்ட் கட்சி, அதனுடைய கருத்து நிலையை ‘விடுதலை இறையியல்' என்னும் நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளதாகக் கருதுவதில்லை. பாலஸ்தீன விடுதலை இயக்கத்திலுள்ள மார்க்சிய அமைப்பான பி.எப்.எல்.பி.யும் (Popular Front of Liberation of Palestine) ஹிஸ்பொல்லாவிற்கு உறுதியான ஆதரவைத் தெரிவித்திருப்பதுடன், ஏகாதிபத்தியத்திற்கும் ஜியோனிசத்திற்கும் எதிரான ஒரு பரந்த அரபு மக்கள் முன்னணியைக் கட்டுவதற்கான அறைகூவல் விடுத்துள்ளது.

மேலும், லெபானிய சமுதாயம் முழுவதுமே இப்போது ஹிஸ்பொல்லாவை ஒரு தேசிய விடுதலை இயக்கமாகவே கருதுகின்றது. ஹிஸ்பொல்லா அமைப்பை அல்கொய்தா, லஸ்கர்இதொய்பா, தாலிபான் போன்ற அடிப்படைவாத, பயங்கரவாத அமைப்புகளுடன் ஒப்பிடுவது மாபெரும் தவறு. மேலும், ஹிஸ்பொல்லாவிற்கு லெபனானிலோ, பிற நாடுகளிலோ இஸ்லாமிய அரசை அமைக்கும் நோக்கமோ, விருப்பமோ இந்த அமைப்புக்கு இல்லை. லெபனானில் மட்டுமின்றி, மத்தியக் கிழக்கு நாடுகள் அனைத்திலும் ஷியா முஸ்லிம்கள் அல்லாதோரிடையேயும் அதன் செல்வாக்கு பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, அதனுடைய செல்வாக்குக்குக் காரணம் அதனுடைய இஸ்லாமியக் கருத்து நிலையோ, சமூக, அரசியல் செயல் திட்டங்களிலுள்ள சில பிற்போக்கான அம்சங்களோ அல்ல. மாறாக, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையும் அமெரிக்க ஏகாதிபத்தியத் தையும் துணிச்சலோடும் உறுதியோடும் அது எதிர்த்து நிற்பதுதான்.



அய்.நா. அவையின் கண்காணிப்பின் கீழுள்ள இஸ்ரேலிய - லெபனான் எல்லையைக் கடந்து வந்த இரண்டு இஸ்ரேலியப் படை வீரர்களை ஹிஸ்பொல்லா சிறைப்பிடித்ததால்தான் கடந்த சூலை ஆகஸ்ட் போர் மூண்டது எனச் சிலர் கூறுகின்றனர். இது பெரும் சர்வதேசக் குற்றமல்ல. ஆயினும் இஸ்ரேல், லெபனான் முழுவதன் மீதும் ஒரு பயங்கரமான முப்படைத் தாக்குதலை நடத்தியது.

இஸ்ரேலின் பலம் மிக்க ராணுவத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஹிஸ்பொல்லா, இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமான ஹைபா (Haifa) மீது கட்யுஷா (Katyusha) ஏவுகணைகளை வீசத் தொடங்கியது. லேசர் கதிர்களின் உதவியுடன் வீசப்படும் இஸ்ரேலிய 1000 - 2000 பவுண்டு எடையுள்ள குண்டுடன் ஒப்பிடுகையில், இந்த கட்யுஷா ஏவுகணை ஒரு மத்தாப்புக் குச்சிதான். அமெரிக்காவிற்குப் பணிந்து போவதை வழக்கமாகக் கொண்டுள்ள அய்.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான், இந்தப் போரைத் தொடங்கி வைத்ததற்கானப் பொறுப்பு, இறையாண்மையுள்ள லெபனான் அரசுக்குக் கட்டுப்படாத ஹிஸ்பொல்லாவையே சாரும் எனக் கூறினாலும், மிதமிஞ்சிய அளவில் இஸ்ரேல் ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதால், ஹிஸ்பொல்லாவின் செல்வாக்கு வளரவே செய்யும் என்றும் கூறினார். போர் தொடங்கி இரு வாரங்களுக்குப் பிறகு பெய்ரூட்டுக்கு வந்து அந்த நகரம் தரைமட்டமாக்கப்பட்டதைப் பார்த்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கோண்டலிசா ரைஸ், உடனடியான போர் நிறுத்தத்தை அமெரிக்கா விரும்பவில்லை என்றும், லெபனானில் ஒரு ‘நீடித்த அமைதி' நிலவுவதற்கான நிலைமைகள் உருவாக்கப்பட்ட பின்னரே போர் நிறுத்தம் பற்றிப் பேச முடியும் என்றும் கூறினார். அதாவது, ஹிஸ்பொல்லாவை ஒழிப்பதற்கும் லெபனானைத் தரைமட்டமாக்குவதற்கும் இஸ்ரேலுக்குக் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள். மேலும், இந்தப் போருக்குப் பிறகு ஒரு ‘புதிய மத்தியக் கிழக்கு' உருவாகும் என்றும் கூறினார். இதன் பொருட்டுதான் அமெரிக்கா அவசரம் அவசரமாக டன் கணக்கில் இஸ்ரேலுக்கு நவீன ஆயுதங்களை குறிப்பாக பதுங்கு குழிகளை ஊடுருவி எதிரிகளை அழிக்கும் ஆயுதங்களை அனுப்பியது.

‘போர்க் குற்றங்கள்' என சர்வதேசச் சட்டங்களும் ஒப்பந்தங்களும் கூறுகிற கொடுஞ்செயல்களை இஸ்ரேல் இழைத்ததை அமெரிக்காவைச் சேர்ந்த, ‘மனித உரிமைக் கண்காணிப்பு' (Human Rights Watch), ‘அம்னஸ்டி இன்டர்நேஷனல்' ஆகிய மனித உரிமை அமைப்புகள் ஆவணப்படுத்தியுள்ளன. லெபனானின் குடி மக்கள் வசிக்கும் இடங்களை இஸ்ரேலிய ராணுவம் குறிவைத்துத் தாக்கியது; இவை ‘ஹிஸ்பொல்லா'விற்கு மனிதக் கவசங்களாகச் செயல்படுகின்றன எனக் கூறியது. தென் லெபனான் நகரமான கானாவில் குடியிருப்புப் பகுதியொன்றின் மீது குண்டு வீசி 16 குழந்தைகள் உட்பட 60 குடிமக்களைக் கொன்றது. இஸ்ரேலிய விமானங்கள் எண்ணற்ற ‘கொத்து குண்டுகளை' (Cluster bombs) வீசின.

‘குண்டுக்குள் குண்டு' என்பது போல ஒரு பெரிய குண்டுக்குள் ஏராளமான சிறிய குண்டுகள் இருக்கும். பெரிய குண்டு வெடித்ததும் இவை பல சதுர மீட்டர்களுக்குச் சிதறிப் பரவும். இவை அனைத்தும் உடனடியாக வெடிக்கா. மண்ணில் புதைந்துபோகும் இவை, மனிதர்களால் அல்லது வேறு ஏதேனும் பொருளால் தொடப்பட்டதும் வெடிக்கும். அதாவது போர் முடிந்த பல ஆண்டுகளுக்குப் பிறகும் அவை பெரும் சேதங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். இது குறித்து விளக்கம் அளிக்குமாறு அய்.நா. அவை இஸ்ரேலிடம் கேட்டிருக்கிறது. வெள்ளை பாஸ்பரசை இஸ்ரேல் பயன்படுத்தியதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டையும் தனது புலன் விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது இந்த அமைப்பு. ‘அம்னஸ்டி இன்டர் நேஷனல்' கீழ்க்காணும் தகவல்களைக் கூறுகிறது:

1.சூலை 12 முதல் ஆகஸ்ட் 14 வரை நீடித்த இந்தப் போரில், இஸ்ரேல் 7000 முறை விமானத் தாக்குதல்களையும் 2500 முறை தனது போர்க் கப்பல்களிலிருந்து குண்டு வீச்சுத் தாக்குதல்களையும் நடத்தியது. ஆர்ட்டில்லரி குண்டுகளுக்குக் கணக்கேயில்லை. ஏறத்தாழ 1200 குடிமக்கள் கொல்லப்பட்டனர்; அவர்களில் மூன்றிலொரு பகுதியினர் குழந்தைகள்; 4054 பேர் படுகாயமடைந்தனர்; நாட்டின் 25 சதவிகித மக்கள் இடம் பெயர்ந்தனர்; அய்ந்து லட்சம் மக்கள் பெய்ரூட்டின் பூங்காக்களிலும், சதுக்கங்களிலும் தஞ்சம் புகுந்தனர்; அவர்களுக்கு எந்த அடிப்படை வசதியும் கிடைக்கவில்லை.

2. நாட்டின் அகக்கட்டுமானங்களின் உயிர்நாடியாக விளங்கும் 31 அம்சங்கள் விமான நிலையங்கள், துறைமுகங்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், மின்நிலையங்கள் முழுமையாகவோ, பகுதியாகவோ அழிக்கப்பட்டன. 80 பாலங்கள், 94 சாலைகள், 25 பெட்ரோல் நிலையங்கள், 900 வர்த்தக நிறுவனங்கள் ஆகியன பெரும் சேதமடைந்தன; மக்களின் குடியிருப்புக் கட்டடங்கள், அலுவலகக் கட்டடங்கள், கடைகள் முதலியவற்றில் 30,000 அழிந்தன; இரண்டு அரசாங்க மருத்துவமனைகள் முற்றாக அழிக்கப்பட்டன; அழிக்கப்பட்ட அகக்கட்டுமானங்களின் மதிப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இது இன்னும் கூடுதலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது). ஏறத்தாழ ஒன்றரை மாத காலம், லட்சக்கணக்கான லெபனியர்கள் குடிநீரோ, மின்வசதியோ, உணவுப் பொருட்களோ இன்றித் தவியாய்த் தவித்தனர். 3. நாடு முழுவதிலும் தனியாருக்குச் சொந்தமான தொழிற்சாலைகளும் வர்த்த்தக நிறுவனங்களும் பெரும் சேதம் அடைந்தன அல்லது முற்றாக அழிக்கப்பட்டன.

அம்னஸ்டி இன்டர்நேஷனலும் வேறு சில சுற்றுச் சூழல் அமைப்புகளும் மற்றொரு பேரழிவைச் சுட்டிக்காட்டியுள்ளன. லெபனானின் மிகப் பெரும் மின் நிலையம் (ஜிய்யே என்னும் நகரில் உள்ளது) இஸ்ரேலிய விமானக் குண்டு வீச்சில் முற்றாக அழிக்கப்பட்டதால், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு மின்வசதி இல்லாமல் போனது மட்டுமின்றி, மின்னுற்பத்திக்காக வைக்கப்பட்டிருந்த எண்ணெய் முழுவதும் கடல் நீரில் கலந்து ஏறத்தாழ 250 மைல் நீளக் கடற்கரையோரமாக கடல் நீரில் எண்ணெய் மிதந்து கொண்டிருக்கிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள் முழுவதும் மடிந்துவிட்டன. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் கடற்கரைகள் மாசுபட்டுப் போய்விட்டன. இரண்டு இஸ்ரேலியப் போர் வீரர்கள் சிறைப்படுத்தப்பட்டதற்காக, ஒரு நாடு முழுவதற்கும் ஒட்டுமொத்தமான தண்டனையை வழங்கி, அதனுடைய பொருளாதாரத்தை முற்றாகச் சீர்குலைத்த இஸ்ரேலின் போர்க் குற்றங்களை விசாரணை செய்வதற்கு ஒரு சர்வதேசத் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என ‘அம்னஸ்டி இன்டர்நேஷனல்' பரிந்துரைத்துள்ளது. அதிநவீன ஆயுத பலத்தால் உலகைப் பணிய வைக்க முடியும் எனக் கருதுகிற அமெரிக்காவும் இந்தப் போரில் வெற்றியடையாததற்குக் காரணம் என்ன?

எல்லாவற்றுக்கும் முதலாக, ஹிஸ்பொல்லாப் போராளிகளின் உறுதியான எதிர்த்தாக்குதலும் லெபனான் மக்கள் அனைவரும் கொடுத்த ஆதரவும்தான். ஹிஸ்பொல்லாவிடமிருந்த சக்தி குறைந்த ஏவுகணைத் தாக்குதல்கள், இஸ்ரேலின் மய்யப்பகுதிக்குக்கூடச் செல்லக்கூடியவை என்பது மெய்ப்பிக்கப்பட்டது. இஸ்ரேலிய ராணுவத்தினருக்கும் மாறாக, ஹிஸ்பொல்லா குறிவைத்தது ராணுவ இலக்குகளையே அன்றி, சாதாரணக் குடிமக்களையல்ல. இஸ்ரேலியத் தரப்பில் உயிரிழந்தவர்கள் ஏறத்தாழ 150 பேர் என்றால், அவர்களில் 42 பேர் மட்டுமே குடிமக்கள்.

ஆகஸ்ட் 11 ஆம் தேதி அய்.நா. பாதுகாப்பு அவை நிறைவேற்றிய தீர்மானம் எண் 1701, இரு தரதப்பினரும் எல்லாவகையான பரஸ்பர ராணுவத் தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோருகிறது. ஹிஸ்பொல்லா தனது தாக்குதல்கள் அனைத்தையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறும் இத்தீர்மானம், அது ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், அதைக் குறிப்பால் உணர்த்துகிறது. இஸ்ரேல் தனது தாக்குதல் ராணுவ நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் என்று அத்தீர்மானம் கூறினாலும் ‘தாக்குதல் நடவடிக்கைகள்' என்பதற்கான வரையறை எதனையும் வழங்கவில்லை. எனவே, இஸ்ரேல், தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்னும் பெயரால் எப்போது வேண்டுமானாலும் ராணுவத் தாக்குதல்களை மேற்கொள்ள இத்தீர்மானம் வழிவகுக்கிறது.

பல்வேறு தேசங்களைச் சேர்ந்த படைவீரர்களடங்கிய அய்.நா. அமைதி காக்கும் படை, 15,000 லெபனானின் அரசாங்கப் படைகளுடன் சேர்ந்து தென் லெபனானில் அமைதியை நிலைநாட்டும் எனக் கூறும் இந்தத் தீர்மானம், போர் தொடங்குவதற்கான பழி முழுவதையும் ஹிஸ்பொல்லா மீது சுமத்துகிறது. லெபனிய அரசாங்கப் படைகள் வெறும் போலிஸ் படையைப் போன்றவைதான். எனவே, இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் தொடுக்குமானால், அவை எளிதாகவும் விரைவாகவும் அழிக்கப்பட்டுவிடும் அபாயமும் உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ஹிஸ்பொல்லாத் தலைவர் நஸ்ரல்லா, இந்தப் போர் நிறுத்தத் தீர்மானத்தை ஒப்புக் கொண்டுள்ளார். அய்.நா.வின் கண்காணிப்பின் கீழுள்ள லெபனான் நாட்டெல்லையை (Blue lines) அத்துமீறிக் கடந்து வந்த இஸ்ரேலியப் படைவீரர்களைத்தான் ஹிஸ்பொல்லா சிறைப்பிடித்தது என்னும் உண்மை குறித்தும், சர்வதேச விதிமுறைகளையும் நெறிகளையும் மீறி இஸ்ரேல் தொடுத்த போரையும் அது இழைத்த போர்க்குற்றங்களையும் குறித்து மவுனம் சாதிக்கும் அத்தீர்மானம், லெபனானுக்கு இஸ்ரேல் இழப்பீடு தர வேண்டும் என்பதைக்கூட வற்புறுத்தவில்லை.

லெபனிய அரசாங்கப் படைகள் ஹிஸ்பொல்லாவை நிராயுதபாணியாக்க முயற்சி செய்தால் இன்னொரு உள்நாட்டுப் போர் வெடிக்கும். ஏறத்தாழ 12 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போர் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏற்படுத்திய பேரழிவை லெபனியர்கள் மறந்துவிட மாட்டார்கள். மேற்சொன்ன அய்.நா. தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலமோ, அண்மையில் நடந்ததுபோல முழு லெபனான் மீதும் தாக்குதல் நடத்துவதன் மூலமோ ஷியா முஸ்லிம் சமூக அடித்தளத்தைக் கொண்ட ஹிஸ்பொல்லாவுக்கும் லெபனானில் உள்ள பிற சமூகங்களுக்கும் குறிப்பாக மரோனைட் கிறித்துவர்களுக்கும் இடையே பூசலை உருவாக்கி, நாட்டைப் பிளவுபடுத்தலாம் என இஸ்ரேல் கண்ட கனவு சிதைந்தது. மக்களை இப்படிப் பிளவுபடுத்துவதில், அதாவது ஷியாக்களுக்கும் சுன்னிகளுக்குமிடையில் பகைமை உண்டாக்குவதில் அமெரிக்கா ஈராக்கில் வெற்றி பெற்றது; பாலஸ்தீனத்தில் பி.எல்.ஓ.விற்கும் ஹமாஸ் அமைப்புக்குமிடையில் பகைமையை உருவாக்கியது இஸ்ரேல். ஆனால், அதுபோன்ற வெற்றி லெபனானில் கிடைக்கவில்லை. அண்மைய போரின்போதும் அதன் பிறகும் லெபனானிய மக்களின் ஒற்றுமை முன் எப்போதைக் காட்டிலும் வலுப்பட்டுள்ளது. இரண்டாவதாக, போர்ச் சூழல் இல்லாத சூழலிலும் முன்கூட்டியே தாக்குதல் நடத்தி (Primitive strike) எதிரியைப் பலமிழக்கச் செய்யும் தனது வழக்கமான உத்தி, இம்முறை செயல்படவில்லை என்பதையும் இஸ்ரேல் உணர்ந்து கொண்டது.



ஹிஸ்பொல்லா இந்தப் போரில், தான் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்து வெற்றிப் பேரணியையும் நடத்தியுள்ளது. ஹிஸ்பொல்லாவின் ராணுவ வலிமையை அதன் ஆதரவாளர்களும் எதிரிகளும் மிகைப்படுத்திக் கூறிவருகின்றனர். இஸ்ரேலியத் தரைப்படைகளும் டாங்கிகளும் லெபனானில் ஊடுருவ முடியாதபடி ஹிஸ்பொல்லாவால் தடுக்க முடிந்தது. ஒரே நாளில் 34 இஸ்ரேலிய டாங்கிகள் (மெர்கேவா டாங்கிகள்) அழிக்கப்பட்டது மாபெரும் சாதனை. எந்த ஒரு அரபு நாடும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் இப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்தியிருக்கவில்லை. அந்த அரபுப் படைகளுக்கு மாறாக, ஹிஸ்பொல்லா ஓர் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட, தங்களது சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதையே முக்கிய அக்கறையாகக் கொண்டிருக்கும் ராணுவ அதிகாரிகளின் தலைமையின் கீழ் உள்ள ஒரு ராணுவம் அல்ல. மாறாக, லெபனிய சமுதாயத்தில் பிற மத சமூகக் குழுக்களின் ஒடுக்குமுறைக்கும் 1982லும் அதன் பிறகும் இஸ்ரேலிய ஊடுருவலுக்கும் ராணுவ ஆக்கிரமிப்புக்கும் உட்பட்டு வந்த, இந்த ஒடுக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்த அடித்தட்டு மக்களால் உருவாக்கப்பட்டதாகும். தம்மிடமிருந்த கொஞ்ச நஞ்சங்களை எப்படியேனும் பாதுகாத்துக் கொள்வதற்காகப் போராடிய மக்களின் அனுபவத்தால் வார்த்தெடுக்கப்பட்ட ஒரு படையாகும்.

அதே சமயம், அரபு நாடுகளில் மெல்ல மெல்ல ஏற்பட்ட நவீனக் கல்வி வளர்ச்சியின் காரணமாக, மிக நவீன ஆயுதங்களைக் கையாளக்கூடிய தொழில்நுட்பத் திறன் கொண்ட ஆயிரக்கணக்கானோரை அராபியப் பல்கலைக் கழகங்கள் ஆண்டுதோறும் உருவாக்குகின்றன. இத்தகையவர்கள் ஹிஸ்பொல்லாவில் ஏராளமாக இருக்கிறார்கள். இதன் காரணமாக ஹிஸ்பொல்லா இரு அம்சங்களை மிக வெற்றிகரமாக ஒன்றிணைத்துப் பயன்படுத்துகின்றது. ஒன்று, மய்யப்படுத்தப்பட்ட தலைமையின் கீழ் இல்லாத, நெகிழ்வான இயங்கு படை (Mobile units) போன்ற கெரில்லாப் போர் வீரர்களின் ராணுவ நடவடிக்கைகள்; மற்றொன்று கட்யுஷா ஏவுகணைகள் போன்றவற்றை ஏவுகின்ற நவீனத் தொழில்நுட்ப வல்லுநர்களின் செயல்பாடுகள். இந்த ஆயுதங்களில் ராடார் கருவியின் உதவியுடன் ஏவப்படும் சி-802 நூர் ஏவுகணை'யுமொன்று. போர்க் கப்பல்களைத் தாக்கும் இந்த நூர் ஏவுகணையொன்றைத்தான் (இது ஈரானில் தயாரிக்கப்பட்டது) 2006 சூலை 14 இல் ஹிஸ்பொல்லா இஸ்ரேலியப் போர்க் கப்பல் மீது செலுத்தி அக்கப்பலைச் செயலிழக்க வைத்தது.

இந்த இயக்கப் போராளிகளுக்கு இரண்டு பண்புகள் உள்ளன : ஒன்று, தங்கள் லட்சியத்திற்கு உறுதியான அர்ப்பணிப்பு; இரண்டு, அரபு நாடுகளின் அரசாங்கங்களின் அரசியலுக்குத் தங்களைக் கீழ்ப்படுத்திக்கொண்டு அதில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது.

ஹிஸ்பொல்லா என்னும் ஓர் அரபுப் படை இத்தகைய வளர்ச்சி கண்டிருக்க, இஸ்ரேலிய ராணுவமோ, கடந்த காலப் போர்களில் அதனுடைய எளிதான வெற்றியைத் தீர்மானித்த சில முக்கிய அம்சங்களை இழந்திருக்கிறது. பாலஸ்தீனர்களின் நிலத்தில், தமக்கென ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க உறுதி பூண்டிருந்த யூத வந்தேறிகளின் முதல் தலைமுறை இப்போது இல்லை. அந்த முதல் தலைமுறையைச் சார்ந்தவர்களுக்கு இருந்த ‘வாழ்வா - சாவா' என்னும் பிரச்சனை இப்போதுள்ள இரண்டாவது, மூன்றாவது தலைமுறை யூதர்களுக்கு இல்லை. கடந்த நாற்பது ஆண்டுகளாகத் தங்களது வளமான வாழ்க்கைக்கு எவ்விதமான பெரும் அச்சுறுத்தலையும் அவர்கள் காணவில்லை.

இஸ்ரேலிய சமுதாயத்தில் மிகப் பெரும்பான்மையினராக உள்ள இந்த இரண்டாம், மூன்றாம் தலைமுறையினரில் மிக அண்மையில் ரஷியாவிலிருந்து குடியேறிய பத்து லட்சம் யூதர்களும் அடங்குவர் (இவர்களில் பலர் உண்மையிலேயே ‘யூதர்கள்'தானா என்னும் சந்தேகமும் எழுந்துள்ளது). இவர்கள் நன்கு நிறுவப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில் கிடைக்கும் அனுகூலங்களைத் துய்க்க வந்தவர்களேயன்றி, அந்த சமுதாயத்தை நிர்மாணிக்க வந்தவர்களல்லர். மாறாக, பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதியை ஆக்கிரமிப்பதிலும், காசா பகுதியில் பாலஸ்தீன அராபியர்களை ஒடுக்குவதிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்கள். மிகப் பாதுகாப்பான இடங்களிலிருந்தும் கவச வண்டிகளிலிருந்தும் அராபியர்கள் மீதும் குண்டுமாரி பொழிவதும் அவர்களைச் சுட்டுத் தள்ளுவதும் சித்திரவதை செய்வதும் வேறு; சண்டைக் களத்தில் எதிரிப் படைகளோடு போரிடுவது வேறு.

மற்றோர்புறம், அமெரிக்காவின் ராணுவ, அரசியல், நிதி உதவிகளோடு இஸ்ரேல் தனது விஸ்தரிப்பு நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டு வந்தாலும், புதிதாகக் கைப்பற்றப்பட்ட நிலங்களையும், இயற்கை மற்றும் செயற்கை வளங்களையும் பாதுகாக்கவும் அவற்றை மேம்படுத்தவும் தேவையான மனித வளம் போதுமான அளவில் அதனிடம் இல்லை. மத்தியக் கிழக்கில் தனது முக்கிய எதிரி என அது கருதும் சிரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதில் அது வெற்றி பெறுவதாக வைத்துக் கொண்டாலும், சிரியாவிலும் லெபனானிலும் அது ஹிஸ்பொல்லாவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஈரானிலுள்ள அணுமின் நிலையங்களை இஸ்ரேலின் விமானப்படையால் தகர்க்க முடியும். ஆனால், ஏழு கோடி மக்களையும் பரந்த நிலப்பிரதேசத்தையும் கொண்டுள்ள ஈரான், பதிலடி கொடுக்கத் தொடங்கினால், சிறு நிலப்பரப்பையும் மக்கள் தொகையையும் கொண்ட இஸ்ரேலின் இருப்பே கேள்விக் குறியாகிவிடும்.

ஈராக்கைப் போலவே லெபனானும் இஸ்லாம், மனித வளம், பொருள் வளம் எல்லாவற்றையும் ஒரு குறிக்கோளுக்காகத் தியாகம் செய்யக்கூடிய சக்திகளைத் தோற்றுவித்திருக்கிறது. எனவே, ஓர்புறம் இஸ்லாத்திற்கும் மற்றோர்புறம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள், இஸ்ரேல் ஆகியவற்றுக்குமுள்ள முரண்பாட்டை வன்முறை கொண்டோ, ராணுவ, தொழில்நுட்ப வலிமை கொண்டோ தீர்க்க முடியாது. எனவே, இஸ்லாமிய நாடுகளும் மேற்கு நாடுகளும் ஒன்றையொன்று முற்றாக அழிப்பதைத் தடுத்துக்கொள்ள வேண்டுமானால், சமரசம் செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இதற்கு மாற்று இனப்படுகொலைகள்தான்.

பாலஸ்தீனர்கள் பெருந்தன்மையோடு சமரசத்திற்கு வந்தார்கள். ஆனால், இஸ்ரேல் திட்டமிட்டு அந்த வாய்ப்பை ஒழித்துக்கட்டியது. பரந்து விரிந்த ஜியோனிச அரசை உருவாக்கும் கனவுகள் தகர்ந்து விழத் தொடங்கியுள்ளன. இந்தக் கனவை நனவாக்கும் கடைசி முயற்சியாக இஸ்ரேலிய ஆளும் வர்க்கங்களும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் தம்மிடமுள்ள அதிநவீன ராணுவத் தொழில் நுட்பங்களைக் கொண்டு வேறு உத்திகளை வகுக்கக் கூடும். இஸ்ரேலிடம் இருக்கும் ஆயிரக்கணக்கான அணு ஆயுதங்களில் சிலவற்றைப் பயன்படுத்தும் சாத்தியப்பாட்டையும் நம்மால் முற்றாக நிராகரிக்க முடியாது. உலகில் ஏகாதிபத்தியம் இருக்கும்வரை, இந்த அபாயம் நீடிக்கவே செய்யும்.
http://www.keetru.com