Saturday, May 08, 2021

மத்திய கிழக்கில் சாத்தியமான சமாதானத்தை ஏற்படுத்துவதன் மூலம் சவூதி அரேபியா அமெரிக்காவை அச்சுறுத்துகிறது

ஜஸ்பர் ஹமான்

இந்த வாரம் சவுதி அரேபியா, அமெரிக்காவின் மிக மோசமான நிர்வாகத்தை எதிர்கொண்டு, ஈரானுடனான தொடர்ச்சியான பதட்டங்களில் ரியாத்தின் தவிர்க்க முடியாத பங்கைப் பற்றிய ஒரு செய்தியை வாஷிங்டனுக்கு அனுப்பியுள்ளது.

சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் ஏப்ரல் 28 புதன்கிழமை, அல் அரேபிய ஒளிபரப்பாளரிடம், தனது அண்டை நாடான ஈரானுடன் 'நல்லதும் சிறப்பானதுமான உறவுகளை' மேற்கொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார். ஈரான் தொடர்பாக புதன்கிழமை சவுதி தெரிவித்த கருத்துக்கள் மேற்கில் உள்ள பல மத்திய கிழக்குப் பார்வையாளர்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

ஈரானை சவுதிகளின் 'பரம எதிரி' என்று பிபிசி வர்ணித்துள்ள, அதே நேரத்தில் இஸ்ரேலிய ஊடகங்கள் ஈரானிய கடும்போக்கு எந்தவித நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்ய முடியும் என்றும் கூறியுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மத முரண்பாடுகளில் மூழ்கியிருந்த இந்த இரு சாராரும் திடீரென ஒரு சாதகமான இணக்கத்தை எவ்வாறு எட்ட முடியும்? எனப் பல வல்லுநர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்கின்றனர்,

'வல்லுநர்கள்' என்று அழைக்கப்படுபவர்களில் பலரின் கலக்கத்திற்கான காரணம் என்னவென்றால், மேற்கு நாடுகளில் பலர் தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொள்வதற்கான கடின உழைப்பை அறியாது  கட்டுக் கதைகளை நம்பத் தொடங்கியுள்ளமையாகும்.

ஈரானும் சவுதி அரேபியாவும் பண்டைய காலம் தொட்டு சமரசம் செய்யமுடியாத மத வேறுபாடுகளால் வகுக்கப்பட்டுள்ள பரம எதிரிகள் என்ற கருத்தை  மாற்றுவது அவ்வளவு எளிதான விடயமல்ல.

பனிப்போரின் போது அடிக்கடி பயன்படுத்தப்பட்ட ஒரு மூலோபாயத்தைப் பயன்படுத்தி, அமெரிக்காவின் எதிரியாகக் கருதப்படுவோமோ என்ற அச்ச உணர்வுடன் மத்திய கிழக்கு நாடுகளை நெருக்கமாகத் தம்வசம் இழுக்க அமெரிக்கா 'ஈரானிய அச்சுறுத்தலை' பயன்படுத்தியுள்ளது.

ஈரானிய அச்சம் பிராந்தியத்தில் வாஷிங்டனின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப அரபு நாடுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, அமெரிக்க நட்பு நாடான இஸ்ரேலையும் பாதுகாக்கிறது, மேலும் லாபகரமான ஆயுத ஒப்பந்தங்களை நியாயப்படுத்தி, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய பிராந்தியத்தில் இராணுவத் தலையீடுகளுக்கு ஒரு நித்திய அங்கீகாரத்தையும் வழங்குகிறது.

கற்பனா ரீதியான மோதல்

என்றாலும், உண்மையில் இந்த 'நெடுங்கால' மோதலானது ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக, எல்லோரையும்விட அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் மிகத் தாராளமாகப் பயன்பட்டது என்பதையே சவூதி-ஈரான் உறவுகளின் வரலாறு எடுத்துக் காட்டுகிறது.

வரலாற்று ரீதியாக, சுன்னி மற்றும் ஷியா மக்களும் நாடுகளும், இடையிடையே பெரும்பாலும் மதப் பிளவுகளைக் கையாளும் தேசியவாத ஆர்வத்தால் உந்தப்படுகின்ற மோதல்களை மட்டுமே அனுபவித்தன.

இஸ்லாத்தின் இரு பிரிவுகளுக்கும் இடையிலான 1,400 ஆண்டுகால மோதல் என்ற கருத்து, எந்தவொரு வரலாற்றாசிரியராலும் உண்மைகளைக்கொண்டு ஆதரிக்க முடியாத ஒரு கட்டுக்கதையாகும். உண்மையில், குறிப்பாக ஐரோப்பாவில் கிறிஸ்தவப் பிரிவுகளுக்கு இடையிலான பல நூற்றாண்டு கால மோதல்களுக்கு மாறாக, சுன்னிகளும் ஷியாக்களும் குறிப்பிடத்தக்க வரலாற்று சகவாழ்வைக் கொண்டிருந்தனர்.

கடந்த மில்லேனியத்தில் சுன்னி மற்றும் ஷியா நாடுகள் ஒருவருக்கொருவர் மேற்கொண்ட 'மதப் போர்கள்' பிராந்தியங்களில் பாரிய ஏகாதிபத்திய நாடுகளின் மோதலாகவே காணப்பட்டன. 17ஆம் நூற்றாண்டில் இது ஒட்டோமான் மற்றும் சஃபாவிட் பேரரசுகளுக்கு இடையிலான மோதலாக இருந்தது. தற்போது இப்பகுதியில் மேற்கத்திய நவகாலனித்துவ அபிலாஷைகள் அதை இயக்குகின்றன.

சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான நேர்மறையான உறவுகளின் பின்னணியைப் படிப்பதற்கு வரலாற்றுப் பட்டப் படிப்பு தேவையில்லை, இருப்பினும் 1999ஆம் ஆண்டைப் போல அண்மைக் காலங்களைத் திரும்பிப் பார்க்கும்போது சுமுகமான உறவுகளுக்குப் பொருத்தமான எடுத்துக்காட்டுகளை காணக்கூடியதாக உள்ளது.

இரு அரசுகளுக்கிடையிலான இருதரப்பு உடன்பாடு நடந்து கொண்டிருப்பதால், 'ஈரானுடனான ஒத்துழைப்புக்கு வரம்புகள் இல்லை' என்று அந்த நேரத்தில் சவுதிகள் எடுத்துரைத்தனர்.

ஈரானின் 1979 புரட்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட முறிந்த உறவுகளை இரு நாடுகளும் சீர்படுத்தக்கொள்ள தீவிரமாக முயன்றுகொண்டிருந்தன. 1990ஆம் ஆண்டு ஈராக்கிய குவைத் மீதான படையெடுப்பு தங்கள் எல்லைகளில் விரோதப் போக்கு குறித்த கவலைகள், இரு நாடுகளையும் ஒன்றுசேர்த்தது. இது தொடர்ச்சியான சமரச அறிக்கைகள் மூலம் இருநாடுகளுக்கிடையிலான கடினமான போக்குகளைத் தளர்த்த உதவியது.

2001இல் பாரசீகக் குடியரசுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரியாத் அதன் வார்த்தைகளை அதிரடியாக பின்பற்றியது. 'ஈரானுடனான சவுதி ஒப்பந்தம் வளர்ந்து வரும் நம்பிக்கையின் அடையாளம்' என்று வாஷிங்டன் போஸ்ட் அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் செய்தி வெளியிட்டது.

ஏழு மாதங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 11 அன்று, பெரும்பாலும் ஒரு சவுதி தீவிரவாதிகள் குழு அமெரிக்க மண்ணில் மிகப்பெரிய பயங்கரவாத செயலை ஏற்படுத்தியதுடன் மத்திய கிழக்கில் திடீரென அதிகார மறுசீரமைப்பு தொடங்கியது.

மேற்கத்தியர் உருவாக்கிய மதப் பிளவு

அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் அரசியல் மையத்தின் மீதான வியத்தகு தாக்குதல்களைத் தொடர்ந்து அதன் பழிவாங்கும் கோபத்திற்கு இலக்காக ஒரு எதிரி தேவைப்பட்டது. 'பயங்கரவாதம்' என்ற கருத்தில் உலகளாவிய போரைத் தொடங்குவது அதன் முதல் படியாகும், ஆயினும் அமெரிக்க இராணுவத்தின் மாபெரும் படைபலத்திற்கு ஒரு அரசின் அளவிற்கு ஒரு பெரிய இலக்கு தேவையாயிருந்தது

செப்டம்பர் 11 தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த பெரும்பாலான தீவிரவாதிகள் சவுதி குடிமக்களே. சவுதி மேட்டுக்குடிகளின் புதல்வர்களால் நேரடியாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் தாக்குதலினால், ரியாத் அச்சுறுத்தல் மற்றும் வாய்ப்பு ஆகிய இரண்டையும் எதிர்கொண்டது.

பனிப்போரின் போது அமெரிக்கா பெரும்பாலும் மத்திய கிழக்கிலிருந்து இராணுவ ரீதியாக ஒதுங்கியே இருந்தது. இப்பகுதியை அது சோவியத்துகளின் 'கொல்லைப்புறமாகவே' பார்த்தது. 2001 ஆம் ஆண்டில், நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் புகை மண்டிய எச்சங்கள் திடீரென உற்சாகத்துடன் பிராந்தியத்தில் 'தலையிடுவதற்கான' உந்துதலை அவர்களுக்கு அளித்ததோடு அதனை நியாயப்படுத்தி சர்வதேச ஆதரவையும் பெற்றுக் கொடுத்தது.

இந்த தாக்குதல்களில் சவுதி அரேபியாவின் தெளிவான ஈடுபாட்டிற்காக அமெரிக்கா அதனைக் குறிவைக்கவில்லை. அதற்கு பதிலாக, சவுதிகளும் வாஷிங்டனும் அமெரிக்காவின் நீண்டகால எதிரியான ஈரானைப் பலிக்கடாவாக்கத் தொடங்கினர். ஈரான், புரட்சிக்குப் பின் அதன் எண்ணெய் தொழிற்துறையை தேசியமயமாக்கியமை பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கர்களை எரிச்சலுக்குள்ளாக்கியது.

அமெரிக்காவும் பிரிட்டனும் இதற்கு முன்னர் ஈரானிய உள் விவகாரங்களில் தலையிட்டு, அமெரிக்காவிற்கும் பொதுவாக மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக ஒரு வெளிப்படையான பொது விரோதத்தை உருவாக்கின. 2001ஆம் ஆண்டில், அமெரிக்காவும் இஸ்ரேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரைப் பயன்படுத்தி அந்த நாட்டை 'தீய அச்சின்' ஒரு பகுதியாக முன்வைத்தன.

கார்ப்பரேட் நிதியுதவி பெற்ற அமெரிக்க பத்திரிகைகளின் போர்குணமிக்க சொல்லாட்சிக் கலைகளில் அந்த சொல்லாட்சி சரியாக பொருந்தியது. அமெரிக்க ஊடகங்கள் சாமுவேல் ஹண்டிங்டனின் 'நாகரிகங்களின் மோதல்' என்ற கருத்தைத் தாண்டி, பனிப்போர் காலம் முழுவதும் செய்ததைப் போலவே உலகை மீண்டும் 'நல்ல' மற்றும் 'தீய' நாடுகளாகப் பிரிக்கத் தொடங்கின.

ஒரு பயனுள்ள கூற்று

பல ஆண்டுகளில், சவுதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையில் 2001 இன் 'வரம்பற்ற ஒத்துழைப்பு' அல்லது 'வளர்ந்து வரும் நம்பிக்கை' என்ற எண்ணம் வரலாற்றிலிருந்து அழிக்கப்பட்டு, அதற்கு பதிலாக தீர்க்கமுடியாத, ஒரு நித்திய மதப் போரின் கதை உருவாக்கப்பட்டது.

ஒரு சிக்கலான மத மோதலின் விவரிப்பு, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் ஒரு அமைதியான தீர்மானத்தின் கருத்துக்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. டெல் அவிவ் மற்றும் வாஷிங்டன் இப்போது இஸ்லாமிய உலகையே பிளவுபடுத்துவதற்கான கருத்தை வெறுமனே நகலெடுத்து பரப்பி வருவதாகவே  தோன்றுகிறது.

கடந்த பத்தாண்டுகளில் மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது மிகப் பெரிய வெளியுறவுக் கொள்கை 'வெற்றிகளை' அடைந்துள்ளது, மத்திய கிழக்கில் சுன்னி நாடுகளுக்கு ஈரான் ஒரு உடனடி அச்சுறுத்தலாக உள்ளது என்ற கதைகளைப் பயன்படுத்தி அவர்களை ஒரு முக்கிய உந்துசக்தியாக மாற்றி உள்ளது.

தெஹ்ரானில் இருந்து வெளிவந்த அச்சுறுத்தல் அமெரிக்காவிற்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தி பாரிய ஆயுத விற்பனைக்கு வழிவகுத்தது, மேலும் படிப்படியாக இஸ்ரேலுடனான அரபு நல்லிணக்கத்தையும் அது உருவாக்கியது.

மத்திய கிழக்கில் ஈரானைப் பயங்கர உருவமாகக் காண்பிப்பதன் மூலம் அமெரிக்காவின் ஆதரவைப் பெறலாம் என்பதை அபுதாபி முதல் ரபாத் வரையிலான வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளதாகத் தெரிகிறது. வாஷிங்டனில், பனிப்போர் காலத்து கம்யூனிச எதிர்ப்பு புராணங்களைப் பயன்படுத்தியதைப் போலவே, செயல்பாட்டாளர்கள் தம்மால் சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட கதைகளை நம்பத் தொடங்கியுள்ளதாகவே தெரிகிறது.

இது வாஷிங்டனுக்கு, மத்திய கிழக்கில் ஈரானிய எதிர்ப்பை அதிகரிக்க வழிவகுத்தது.

எவ்வாறாயினும், சவூதி அரேபியா மீண்டும் ஒரு புதிய அமெரிக்க நிர்வாகத்தின் அழுத்தத்தை எதிர்கொள்கிறது. உள்நாட்டு அழுத்தங்களால் இயக்கப்படும் பைடனின் குழு, அதன் மனித உரிமை மீறல்கள், யேமனில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் சவுதி விமர்சகர் ஜமால் கஷோகி கொலைக்கான இராஜதந்திரப் பின்னணி என்பவற்றின் மூலம் சவுதியை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறது.

சவுதிகள் வாஷிங்டனை அதன் பேரம் பற்றி நினைவூட்டுகிறார்கள்

இதற்கு பதிலளிக்கும் விதமாக சவூதி அரேபியா அதன் முக்கியமான இன்னும் சொல்லப்படாத பங்கை அமெரிக்காவுக்கு நினைவூட்டுவதாகவே தோன்றுகிறது - மத அடிப்படையிலான ஒரு சவூதி-ஈரான் பிளவு பற்றித் தொடரும் கட்டுக்கதையும் அதில் ஒன்றாகும்.

சவூதி அரேபியா ஈரானுக்கு ஒரு 'ஒலிவ் கிளையை' நீட்டியுள்ளது, அதற்கு பதிலாக அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பென்டகனின் வில்லினூடாக ஒரு இராஜதந்திர அம்பு சீறிப் பாயும் வாய்ப்புள்ளது. 2018ஆம் ஆண்டில் ஈரானிய தலைமையை அடோல்ஃப் ஹிட்லருடன் ஒப்பிட்ட முடிக்குரிய இளவரசர் முகம்மது பின் சல்மான் இப்போது 'நாள் முடிவில், ஈரான் எமது அண்டை நாடு, அதனுடன் நல்ல உறவுகளைப் பேணவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்' என்று கூறுகிறார்.

வளைகுடா முழுவதும் தனது அண்டை நாடுகளுடன் அமைதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பில் ரியாத் அமெரிக்காவை பகிரங்கமாக 'அச்சுறுத்துகிறது'. அத்தகைய செயல், அமெரிக்கா மற்றும் அதன் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலின் பல தசாப்த கால வாக்கு வன்மையை வலுவற்றதாக்கிவிடும். பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின், பிளவுபடுத்தி வெற்றிகொள்ளும் மூலோபாயத்தின் அடித்தளமாக விளங்கிய ஒரு கதையையும் அது அகற்றிவிடும்.

இருப்பினும், சவுதி அரேபியா திடீரென ஈரானுடன் சமரசம் செய்துகொள்ளும் வாய்ப்பும் குறைவாகவே உள்ளது.

பாரசீக தேசத்துடனான ஒரு நல்லிணக்கத்தால் சவூதி-அமெரிக்க கூட்டணி வழங்கும் நிதி மற்றும் இராணுவ நலன்களை வழங்க முடியாது. மேற்கத்திய உந்துதலினால் உருவான கதைகள் சவுதிகளை சுன்னி உலகின் கருத்தியல் தலைமைக்கு உயர்த்தியுள்ளது, இது சவூதி இராணுவத்தின் பாரிய அமெரிக்க போர் தளபாட மறுசீரமைப்பால் ஆதரிக்கப்படுகிறது.

அதற்குப் பதிலாக, தெஹ்ரானுக்கான ரியாத்தின் இணக்கமான வார்த்தைகள் பெரும்பாலும் வாஷிங்டனை அதன் பேரம் பற்றி நினைவூட்டுவதையே குறிக்கிறது. சவுதி அரண்மனையைப் பொறுத்தவரை, அமெரிக்கா நிபந்தனையின்றி சவுதிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும், அல்லது மத்திய கிழக்கில் நீண்டகால அமைதிக்கான சாத்தியத்தை எதிர்கொள்வதோடு, அமெரிக்க பிராந்திய செல்வாக்கைப் படிப்படியாக இழக்கவும் நேரிடும்.

ஆதாரம்: மொராக்கோ உலக செய்திகள்

தமிழில் முஹம்மத் றஸீன்

No comments:

Post a Comment